சில்லறை கடைகளில் 250 மிலி ஆவின் பாக்கெட்: பால்வளத்துறை அமைச்சர் உத்தரவு

சில்லறை விற்பனை கடைகளில் 250 மி.லி. ஆவின் பால் பாக்கெட்களை அதிகளவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவின் அதிகாரிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் ரமணா உத்தரவிட்டுள்ளார்.

பால் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர்கள் மற்றும் மாவட்ட துணை பதிவாளர்கள் பங்கேற்ற மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் மாதவரம் பால்பண்ணையில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர் ரமணா பேசியதாவது:

தமிழகத்தில் பால்வளத்துறை செயல்படுத்திய பல்வேறு திட்டங்களால் ஆவின் பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 28.89 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு கால் நடை தீவனம் வழங்க தற்போதைய மாதாந்திர விற்பனையான 5000 மெட்ரிக் டன் அளவை 8000 மெட்ரிக் டன்னாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க லாபம் ஈட்டும் ஒன்றியங்கள் கால்நடை தீவன மானியமாக கிலோ ஒன்றிற்கு ரூ.2 முதல் 4 வரையும், தாது உப்பு கலவைக்கு கிலோ ஒன்றிற்கு ரூ.25-ம் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதை பால்உற்பத்தியாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

பால் உற்பத்தியாளர்களுக்கு பாலுக்கான பணப் பட்டுவாடா உரிய நேரத்தில் அளிக்கப்பட வேண்டும். பால் கொள்முதல் உயர்ந்துள்ளதால் பால், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட உப பொருட்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டும். ஆவின் 250 மி.லி., பால் பாக்கெட்களை சில்லறை விற்பனை கடைகளில் அதிகளவில் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ரமணா பேசினார்.

இக்கூட்டத்தில், ஆவின் நிர்வாக இயக்குநர் சுனில் பாலீவால், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய இணை நிர்வாக இயக்குனர் கஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE