டாஸ்மாக் கடைக்கு பூட்டு: திண்டுக்கல் எம்.எல்.ஏ. பாலபாரதி உட்பட 98 பெண்கள் கைது

டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட எம்எல்ஏ உட்பட 98 பெண்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் அருகே சித்த ரேவில், அய்யம்பாளையம்- தாண்டிக்குடி மலைக்கு செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் உள்ள இந்தக் கடையை மூடக்கோரி பொதுமக்கள், மாதர் சங்கம் சார்பில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆனால் இதுவரை எந்த நடவடி க்கையும் எடுக்கப் படவில்லை. இதனால் நேற்று காலை திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கே.பாலபாரதி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு அந்த டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டனர். டி.எஸ்.பி. சுருளியாண்டி தலைமையில் போலீஸார் அவர்களைத் தடுத்தனர். அதனால், போலீஸாருக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அங்கு வந்த கலால்துறை கோட்ட உதவி ஆணையர் சேதுராமன், அலுவலர் திலகம் ஆகியோர் எம்எல்ஏவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடையை மூட வேண்டுமென எம்எல்ஏ வலியுறுத்தினார். அதற்கு அதிகாரிகள், மேலதிகாரிகள் சென்னையில் ஆய்வுக் கூட்டத்தில் இருக்கின்றனர். அவர்களை உடனடியாக தொடர்புகொள்ள முடியவில்லை என்றனர்.

அதிருப்தியடைந்த எம்எல்ஏ உள்ளிட்டோர் டாஸ்மாக் கடையை அகற்றும்வரை இங்கிருந்து நகரமாட்டோம் என்றனர். அதனால் கே.பாலபாரதி எம்எல்ஏ, மாதர் சங்க மாவட்ட செயலர் ஜி.ராணி, மாவட்ட தலைவர் ஜானகி, மாநில குழு உறுப்பினர் வனஜா, ஒன்றியத் தலைவர் சுதா, செயலர் சூசைமேரி , ஒன்றிய துணைச் செயலர் மகாலட்சுமி உட்பட 98 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

பெண்கள், மாணவிகள் அச்சம்

கே.பாலபாரதி எம்எல்ஏ கூறும்போது, டாஸ்மாக் கடை அருகே ஏராளமான கடைகள், பள்ளி, கோயில்கள், வியாபார நிறுவனங்கள், பஸ் நிலையம் செயல்படுகின்றன. பெண்கள், இந்த கடையை தாண்டித்தான் குடிநீர் பிடிக்க, பஸ் நிலையம் செல்ல வேண்டியுள்ளது. மாணவ, மாணவிகள் இந்த டாஸ்மாக் கடையை கடந்துதான் பள்ளிக்கு செல்கின்றனர்.

டாஸ்மாக் கடை கோயில், பள்ளியில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். அதுவும் கிராமத்தில் 100 மீட்டர் தொலைவில்தான் இருக்க வேண்டும். ஆனால், இங்கு அங்கன்வாடி, கோயிலுக்கு மிக அருகிலேயே 6 மீட்டர் தொலைவில்தான் உள்ளது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE