படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்

படித்து முடித்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ள சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

படித்து முடித்து வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ள இளைஞர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தமிழக அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது. சென்னையில் உள்ள இளைஞர்கள் இந்த உதவித் தொகையைப் பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்களாக இருக்க வேண்டும். உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ மற்றும் பட்டப் படிப்பு போன்ற கல்வி தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும்.

அரசின் உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கிடைக்கும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் உதவித் தொகை பெற நந்தனத்தில் உள்ள தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகள் கிண்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலு வலகத்தில் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் கல்வித் தகுதி, வயது மற்றும் வருமான வரம்பு ஏதுமில்லை. ஆனால் மாற்றுத்திறனாளி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஓராண்டுக்கு மேல் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும்.

மற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ50 ஆயிரத்துக்கு மேல் இருக்க கூடாது.

ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகள் சுய உறுதிமொழி ஆவணம்,வேலை வாய்ப்பக பதிவு எண் மற்றும் உதவித் தொகை எண் ஆகியவற்றுடன் புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE