141 நிறுவனங்கள் விண்ணப்பம்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க 660 நிறுவனங்கள் பதிவு

By கி.கணேஷ்

உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க பல்வேறு பிரிவுகளின் கீழ் 660-க்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 250 பதிவுகள் முதலீடு அடிப்படையில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் திறன் வாய்ந்த மனிதவளம், முதலீட்டுக்கு ஏற்ற சூழல், கட்டமைப்பு வசதி, உடனடி அனுமதி இவற்றின் அடிப்படையில் ஏற்கெனவே பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இந்நிலையில் மேலும் பல நிறுவனங்களை ஈர்க்க உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இந்த ஆண்டு மே மாதத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது பல்வேறு காரணங்களால் வரும் செப்டம்பர் மாதம் 9,10 தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் மாநாடு நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானதும் அரசு சார்பில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து தமிழக தொழில்துறை சார்பில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஜெர்மனியில் ‘ரோடு ஷோ’க்களை நடத்தினர்.

இது தவிர மாநிலங்கள் அளவிலும் தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களிலும் உள்ளூர் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலும் மாநாட்டில் நடக்கும் கண்காட்சியில் தமிழக தொழில் நிறுவனங்களை பங்கேற்கச் செய்யும் வகையிலும் கவன ஈர்ப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தொழில் துறையின் இந்த முயற்சியால் இம்மாநாட்டில் பங்கேற்க கடந்த 20-ம் தேதி வரை பல்வேறு பிரிவுகளின் கீழ் 660 பதிவுகள் வந்துள்ளன. இதில் ஏற்கெனவே தமிழகத்தில் முதலீடு செய்துள்ள 108 நிறுவனங்கள் கூடுதல் முதலீடு அடிப்படையிலும், அரசுடன் நேரடியாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் புதிய முதலீடு செய்ய 141 நிறுவனங்களும் பதிவு செய்துள்ளன. இவற்றில் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகம் என கூறப்படுகிறது. மேலும் உலகளாவிய கருத்தரங்கில் பங்கேற்க 166 நிறுவனங்களும், உள்நாட்டு கருத்தரங்கில் பங்கேற்க 145 நிறுவனங்களும், கண்காட்சியில் பங்கேற்க 346 நிறுவனங்களும், பார்வையாளர்கள் அளவில் 72 நிறுவனங்களும் பதிவு செய்துள்ளன. தற்போது முதலீட்டாளர்கள் மாநாடு செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தொழில்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மாநாடு கடந்த ஆண்டு அக்டோபரில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இந்த ஆண்டு மே மாதத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது வரும் செப். 9,10 தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE