தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு தடை: கி.வீரமணி மீது வழக்கு பதிவு

By செய்திப்பிரிவு

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்த தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ள போலீஸார், அவர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ஏப்ரல் 14-ம் தேதி தாலி அகற்றும் போராட்டம் நடத்த இருப்பதாகவும், அந்த நிகழ்ச்சி முடிந்ததும் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரத்தைச் சேர்ந்த அகில இந்திய இந்து மகாசபா துணைத் தலைவர் சந்திரசேகரன், வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதுடன் கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

புகாரின்பேரில் கி.வீரமணி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்துவதற்கும் தடை விதித்துள்ளனர்.

சட்டப் பரிகாரம்: கி.வீரமணி

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திராவிடர் கழகம் சார்பில் வரும் செவ்வாய்க்கிழமை அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. அன்றைய தினம் மாட்டுக் கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்துவதற்கு சென்னை வேப்பேரி காவல் துறையினர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். காவல் துறையினரின் இந்த நடவடிக்கைக்கு உரிய முறையில் சட்ட பரிகாரம் தேடப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE