தமிழகத்தில் சிசு இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் சிசு இறப்பு விகிதம் குறைந்து வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் தலைமையில் நடந்த கூட்டத்தில் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் கீதா லட்சுமி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் குழந்தைசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கு பின் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை 10 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு ரூ.2 ஆயிரத்து174 கோடி காப்பீட்டுத் தொகையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. காப்பீடு தொகை மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு மட்டும் ரூ.788 கோடி கிடைத்துள்ளது. தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பது போன்ற பல்வேறு திட்டங்களால் சிசு இறப்பு தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக பச்சிளங் குழந்தைகளை தொடர் சிகிச்சைக்காகவும் உயர் சிகிச்சைக்காகவும் எடுத்துச் செல்வதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட 37 பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு அவசர கால ஊர்திகள் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் மட்டும், கடந்த 4 ஆண்டுகளில் 23 ஆயிரத்து 769 பச்சிளம் குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உயர் சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உயிர் காக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.

தமிழகத்தில் குறைவு

இந்திய அளவில் சிசு இறப்பு விகிதம் 1000-க்கு 40 ஆக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் இது 1000-க்கு 21 என்ற அளவை எட்டியுள்ளது. இதேபோல இந்திய அளவில் ஒரு லட்சம் பிரசவத்தின்போது தாய்மார்கள் இறப்பு விகிதம் 167 ஆக இருக்க, தமிழகத்தில் 68 என்ற நிலையை எட்டியுள்ளது. இந்த அரசு ஏழை கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மகப்பேறு நிதியுதவியை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தி யுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 26.72 லட்சம் கர்ப்பிணிகள் ரூ.2 ஆயிரத்து 477 கோடியே 95 லட்சம் நிதி உதவி பெற்றுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் சேவையால் 2011-12 முதல் 7 லட்சத்து 5 ஆயிரம் கர்ப்பிணிகள், 68 ஆயிரத்து 150 பச்சிளம் குழந்தைகள் உட்பட 26 லட்சத்து 87 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர். 104 மருத்துவ தகவல் சேவை மூலம் பொதுமக்களிடமிருந்து 9 லட்சத்து 62 ஆயிரத்து 27 அழைப்புகள் பெறப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE