நாட்டின் நிதி ஆதாரங்களைப் பெருக்க பாஜக அரசு முயற்சி எடுக்கவில்லை: இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் குற்றச்சாட்டு

நாட்டின் நிதி ஆதாரங்களைப் பெருக்க மத்திய பாஜக அரசு முயற்சி எடுக்கவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டினார்.

வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தின் விஐடி பிஸினஸ் ஸ்கூல் சார்பில், ‘மத்திய பட்ஜெட்-2015-16’ குறித்த விவாத நிகழ்ச்சி, சென்னை பாரதிய வித்யா பவனில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று பேசினர்.

சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்):

விவசாயிகள் மற்றும் ஏழை, நடுத்தர மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக மத்திய பட்ஜெட் உள்ளது. நேரடி வரி ரூ.8,315 கோடி அளவுக்கு குறைக் கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மறைமுக வரி ரூ.23,383 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டில் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு 7 சதவீதம் குறைந்துள்ளது.

திருச்சி சிவா (திமுக):

மத்திய பட்ஜெட்டில் சமூக திட்டங்களுக்கான நிதி, 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு நிதியை குறைத்துள்ள நிலையில், புதிதாக 9 எய்ம்ஸ் மருத்துவமனைகளை எப்படி ஏற்படுத்த முடியும்? நீராதாரத் துறைக்கான நிதி, ரூ.3,600 கோடியில் இருந்து ரூ.1,600 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நதிகள் இணைப்புத் திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் என்பது தெரியவில்லை.

டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்):

நிதி ஆதாரங்களைப் பெருக்க பாஜக அரசு முயற்சி எடுக்க வில்லை. பணக்காரர்களுக்கு அனைத்து சலுகைகளும் வழங் கப்பட்டுள்ளன. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் டாக இது இல்லை. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு தாரைவார்க்க மோடி அரசு முடிவெடுத்துள்ளது.

தமிழிசை சவுந்திரராஜன் (பாஜக):

இந்த பட்ஜெட், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானது என்று கூறுகின்றனர். ஜன் தள், தூய்மை இந்தியா திட்டங்கள் யாருக்கானது? தூய்மை இந்தியா திட்டம் மூலம் 5 லட்சம் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதன் மூலம், தமிழகத்துக்கு ரூ.86 ஆயிரம் கோடி கிடைக்கும். தமிழகத்தை மின் வெட்டு இல்லாத மாநிலமாக மாற்ற ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

விவாதத்துக்கு தலைமை யேற்று பேசிய விஐடி வேந்தர் விசுவநாதன், ‘‘உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 6 சத வீதத்தை கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்ற பரிந்துரை இதுவரை நிறைவேறவில்லை. கல்விக்கு 4 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் தேர்தலில் ஊழலை ஒழிக்க வேண்டும்’’ என்றார்.

விவாத ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் குருமூர்த்தி பேசும் போது, ‘‘பட்ஜெட்டில் பல பாதக அம்சங்கள் இருப்பினும், சில முக்கிய விஷயங்களும் உள்ளன. முத்ரா வங்கி திட்டத்தால் சிறிய நிறுவனங்கள் நடத்துவோர் பயன்பெறுவதுடன், கந்து வட்டி பிரச்சினை குறையும். கிராமப்புறங்களில் அதிக வேலை வாய்ப்பு உருவாகும்’’ என்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி., இரா.செழியன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE