வண்டலூர் உயிரியல் பூங்காவில் உருவாகும் வண்ணத்துப் பூச்சிகளின் வசிப்பிடம்: ரூ.4 கோடியில் கட்டுமானப் பணிகள் நிறைவு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ரூ.4 கோடி செலவில் வண்ணத்துப் பூச்சி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை நிறைவு செய்துள்ளது.

வண்ணத்து பூச்சிகள் தாவரங் களின் அயல் மகரந்த சேர்க்கைக்கு முக்கிய பங்காற்றி வருகின்றன. இவை இல்லையென்றால் பல தாவ ரங்களில் அயல் மகரந்த சேர்க்கை நடைபெறாமல் தரமான விதைகள் உருவாவது தடைபட்டு, பல தாவரங் கள் அழியும் நிலை ஏற்படலாம்.

பல பறவைகளுக்கு வண்ணத்துப் பூச்சிகள் உணவாக இருக்கின்றன. வண்ணத்துப் பூச்சிகள் இல்லாவிட்டால் அதை உண்டு உயிர் வாழக்கூடிய உயிரினங்களும் காணாமல் போய்விடும். இதனால் விலங்கினச் சமநிலை பாதிப்புக்குள்ளாகும். வண்ணத்துப் பூச்சிகள், தாவரம் மற்றும் விலங்கினங்கள் மத்தியில் பல்லுயிர் பெருக்க காரணியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சிறப்பு மிக்க வண்ணத்துப் பூச்சிகளுக்கென தனி பூங்கா ஒன்று மத்திய அரசு நிதியில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலமாக ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை தற்போது நிறைவு செய்துள்ளது.

இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: இந்தியாவில் 1500-க்கும் மேற்பட்ட வண்ணத்து பூச்சி இனங்களும், தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட வண்ணத்து பூச்சி இனங்களும் வாழ்கின்றன. வண்ணத்துப் பூச்சிகளின் பணிகள், வாழ்க்கை முறை, அதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவது குறித்து பொதுமக்கள் பெரிய அளவில் அறிந்திருக்கவில்லை. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் வண்ணத்துப் பூச்சிகள் பூங்கா அமைக்கப்படுகிறது.

இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. பொதுப்பணித்துறை முறைப்படி எங்களிடம் ஒப்படைத்த பிறகு அதில் வண்ணத்துப் பூச்சிகளுக்கு உணவளிக்கும் விதமாக பூந்தேன் தோட்டங்கள், வண்ணத்து பூச்சிகள் இடும் முட்டையில் இருந்து உருவாகும் புழுக்கள் உண்ணுவதற்காக உணவு தாவர தோட்டங்கள் ஆகியவற்றை அமைக்க இருக்கிறோம். இந்த பூங்காவில் திறந்தவெளி பூங்காவும், கூண்டுடன் கூடிய பூங்காவும் இடம்பெறும். பொதுமக்கள் பார்வையிடுவதற்கான நிலையை அடைய சுமார் ஓராண்டாகலாம். இந்த பூங்காவில் பொதுமக்களைக் கவரும் வண்ணத்துப் பூச்சிகளான வரிச்சிறகு, செவ்வந்தி சிறகு, மயிலழகி, சிவப்பு உடலழகி, பூவிழியாள் உள்ளிட்ட வண்ணத்து பூச்சிகள் இடம்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE