செல்வ மகள் சேமிப்புத் திட்டம்: தமிழகத்தில் 6.11 லட்சம் கணக்குகள் தொடக்கம்

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 6.11 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மண்டல அஞ்சல் துறை அதிகாரி மெர்வின் அலெக்ஸாண்டர் தெரிவித்தார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இந்திய பெண்கள் சேமிப்பு தின விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 300 பெண்களுக்கு அஞ்சலக சிறு சேமிப்பு கணக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. சீசா தொண்டு நிறுவனத்தின் மூலம் மதுரவாயல் அஞ்சல் நிலையத்தில் இந்தக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னை நகர மண்டல அஞ்சல் துறை அதிகாரி மெர்வின் அலெக்ஸாண்டர், சீசா தொண்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டேனியல் ஆகியோர் கணக்குப் புத்தகங்களை பெண்களுக்கு வழங்கினர்.

விழாவில் மெர்வின் அலெக்ஸாண்டர் பேசியதாவது:

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கடந்த மார்ச் 31-ம் தேதி வரை தமிழகத்தில் 6 லட்சத்து11 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னை வட்டாரத்தில் மட்டும் 2 லட்சத்து 23 ஆயிரம் கணக்குகள் மூலம் ரூ.90 கோடி திரட்டப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தாம்பரம் டிவிஷனில் 52 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்துக்கான வட்டி விகிதம் 9.1 சதவீதத்தில் இருந்து 9.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இலக்கைத் தாண்டி அதிக கணக்குகளைத் தொடங்கியதற்காக தமிழக அஞ்சல் துறைக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அலெக்ஸாண்டர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE