சமையல் எண்ணெய் குடோனில் தீ விபத்து: 15 பேர் உயிர் தப்பினர்

பாரிமுனையில் சமையல் எண்ணெய் குடோனில் தீப்பிடித் தது. இந்த விபத்தில் 15 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னை பாரிமுனை அருகே கொத்தவால்சாவடி ஆச்சாரப்பன் தெருவில் ஜெகநாதன் என்பவர் 2 மாடி கட்டிடத்தில் சமையல் எண்ணெய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

நெய், டால்டா மற்றும் அனைத்து வகை சமையல் எண்ணெய்களும் டப்பாக்கள் மற்றும் பாக்கெட்டுகளில் இங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.இங்கு வேலை செய்யும் 10 ஊழியர்களும், 2 குடும்பத்தினரும் இந்த கட்டிடத்திலேயே தங்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் முதல் தளத்தில் இருந்து ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து மொட்டை மாடியில் படுத்திருந்த தொழிலாளர்கள் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது எண்ணெய் இருந்த டப்பாக்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்களும், அங்கிருந்த இரண்டு குடும்பத் தினரும் பத்திரமாக அங்கிருந்து வெளியேறி தீயணைப்பு துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து தீயணைப்பு படையினர் 12 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் அந்த தெரு குறுகலாக இருந்ததால் தீயணைப்பு வாகனங்கள் எளிதில் செல்ல முடியவில்லை. இதைத்தொடர்ந்து சிறிய தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டன.

எண்ணெய்யில் பிடித்த தீ என்பதால் அதை அணைக்க தண்ணீரை பயன்படுத்தாமல் நுரையை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கட்டிடத்தில் இருந்த 15 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE