வீட்டில் திருடிய வேலைக்கார பெண்கள் கைது: 24 பவுன் நகை, ரூ.1 லட்சம் பறிமுதல்

கீழ்ப்பாக்கத்தில் வேலை செய்த வீட்டில் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் வேடஸ் சாலையில் வசிப்பவர் சாகர்(27). இவரது வீட்டில் அலமேலு(48) என்ற பெண் கடந்த 12 ஆண்டுகளாகவும், மகேஸ்வரி(30) என்ற பெண் 2 ஆண்டுகளாகவும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் இருந்த நகைகள், பணம் சிறுகச் சிறுக காணாமல் போனது.

இதைக் கண்டுபிடிக்க வீட்டில் ரகசிய கண்காணிப்பு கேமராவை சாகர் பொருத்தினார். சில நாட்களுக்குப் பிறகு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை ஆராய்ந்தபோது இரு பெண்களும் சேர்ந்து பீரோவில் இருந்து பணத்தை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

அந்த வீடியோ ஆதாரத்துடன் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் சாகர் புகார் கொடுத்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த பெண்கள் பலமுறை திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை யில் 24 பவுன் நகை, ரூ.1 லட்சம் மதிப்புள்ள இரு வைர டாலர்கள், ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

2 வீடுகளில் திருட்டு

சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டை சன்னியாசி தெருவில் வசிப்பவர் முரளி (55). துணி வியாபாரி. இவரது மனைவி ஜான்சிமேரி (50). இவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் காலையில் வீட்டை பூட்டி விட்டு இருவரும் பணிக்கு சென்று விட்டனர். மாலையில் முரளி வீட்டுக்கு வந்தபோது, கதவு உடைக் கப்பட்டு கிடந்தது. உள்ளே பீரோ வும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து ஓட்டேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புழல் காவாங்கரை பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் ரஞ்சித்(37). இவர் மணலியில் இரும்புக் கடை வைத்துள்ளார். இவரது குடும்பத்தினர் கடந்த 11-ம் தேதி ராஜஸ்தான் சென்றுவிட்டனர். ரஞ்சித் மட்டும் தனியாக இருந்தார். நேற்று முன்தினம் காலையில் வீட்டை பூட்டி விட்டு போரூரில் உள்ள நண்பரின் வீட்டுக்கு ரஞ்சித் சென்றார். மாலையில் திரும்பி வந்தபோது, வீட்டின் கதவும், பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த 3 சவரன் நகை, ரூ.25 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து புழல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE