இலங்கையில் உள்ள விசைப் படகுகளை மீட்க தமிழக மீனவர் குழு இலங்கைக்கு பயணம்

By செய்திப்பிரிவு

இலங்கையில் உள்ள தங்களின் விசைப் படகுகளை மீட்க 143 பேர் கொண்ட மீனவர் குழு 18 படகுகளில் நேற்று இலங்கை புறப்பட்டுச் சென்றது.

கடந்த ஜுன் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் வரையிலும் இலங்கை கடற்படையினர் 87 படகுகளை சிறைப்பிடித்து 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கைது செய்தனர். மீனவர்களின் பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பின்னர், படிப்படியாக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அவர்களது படகுகள் விடுவிக்கப்படவில்லை.

அந்தப் படகுகள் இலங்கை மன்னார், யாழ்பாணம், திரிகோண மலை மாவட்டத் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டு நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி இருந்தன.

இந்நிலையில் கடந்த ஜனவரியில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அதிபராக சிரிசேனா பதவியேற்றதும், நல்லெண்ண நடவடிக்கையாக தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, முதல் கட்டமாக கடந்த மார்ச்சில் 31 விசைப் படகுகளை இலங்கை அரசு விடுவித்தது. இரண்டாவது கட்டமாக ராமேசுவரம், மண்டபம், ஜெகதாப்பட்டிணம், கோட்டைப்பட்டிணத்தில் இருந்து 143 பேர் கொண்ட மீனவர்கள் மற்றும் மீன்வளத் துறையினர் கொண்ட குழுவினர் 18 படகுகளில் நேற்று இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இவர்கள் வெள்ளி அல்லது சனிக்கிழமை தங்களது படகுகளுடன் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE