மலைச்சாலையில் மினி லாரி கவிழ்ந்து யானை பலி

தேனி மாவட்டம், வருசநாடு அருகே மலைச்சாலையில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் கொண்டு செல்லப்பட்ட பெண் யானை நேற்று பலியானது.

வருசநாடு மலைக்கிராமம் அம்பேத்கர் காலனியில் நேற்று முன்தினம் காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்காக, மதுரை தல்லாகுளம் கமலா நகரைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் என்பவருக்கு சொந்தமான சீதா (41) என்ற பெண் யானை வரவழைக்கப்பட்டு, கோயில் திருவிழா ஊர்வலத்தில் பங்கேற்றது.

விழா முடிந்தபின், நேற்று காலை மினி லாரியில் யானையை ஏற்றி மதுரைக்குக் கொண்டு சென்றனர். மயிலாடும்பாறை – ஓட்ட அணை என்ற இடத்தில் மலைச்சாலையில் சென்றபோது நிலை தடுமாறிய யானை திடீரென ஒருபக்கமாக சாய்ந்துள்ளது. இதில் பாரம் தாங்காமல் யானை கீழே விழுந்தது. அதன்மீது லாரியும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மலைச்சாலையில் இரும்பு தடுப்புச் சுவர் இருந்ததால், லாரிக்கும், சுவருக்கும் இடையில் சிக்கிய யானை பலியானது.

மினி லாரியை ஓட்டி வந்த முனீஸ் வரனும், யானை உரிமையாளரும் தப்பிவிட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த வருசநாடு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் லாரியில் யானையை ஏற்றியவர்கள் இருபுறமும் கம்பு வைத்து கயிறு மூலம் கட்டாததும், இதனால் மலைச்சாலையில் லாரி வந்தபோது, யானை நிலைதடுமாறி கீழே சாய்ந்ததும் தெரியவந்தது. போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே 2 முறை அபராதம்

இதுபற்றி வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, யானையை ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு வாகனங்களில் அழைத்துச் செல்ல வேண்டுமென்றால், சென்னையில் உள்ள வன உயிரின முதன்மை பாதுகாவலர் அலுவலகத்தில் உரிய முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த யானையை அழைத்துச் செல்ல எந்தவித அனுமதியும் பெறவில்லை. வழக்கமான நிபந்தனைகளைகூட பின்பற்றாமல், குறுகலான சிறிய லாரியில் யானையை ஏற்றிச் சென்றுள்ளனர்.

இதே யானை சீதாவை வைத்து பாகன் பிச்சையெடுத்ததால், அதன் உரிமையாளரிடம் ஏற்கெனவே இரண்டுமுறை அபராதம் வசூலித்து எச்சரித்திருந்தோம். அதையும் மீறி, தற்போதும் விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE