புதுச்சேரியில் விரிசல் விழுந்த அடுக்குமாடி கட்டிடத்தை இடிக்கும் பணி தொடக்கம்

புதுச்சேரியில் விரிசல் விழுந்துள்ள அடுக்கு மாடி கட்டிடத்தை இடிக்கும் பணியை நகர குழுமத்தினரே ஐந்து நாட்களுக்கு பிறகு நேற்று தொடங்கினர். இக்கட்டிடத்தினால் பாதிக்கப்பட்ட அருகேயுள்ள குடியிருப்பு வாசிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் பழனிராஜ உடையார் நகர் விரிவாக்கப்பகுதி உள்ளது. இப்பகுதியில் தில்லை கண்ணம்மா வீதி-தனராஜ் உடையார் வீதி சந்திப்பில் புதிதாக 4 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. மொத்தம் 9 வீடுகள் இக்குடியிருப்பில் உள்ளன. அனைத்து வீடுகளும் விற்கப்பட்டு விட்டன. வரும் 14-ம் தேதி கட்டிடம் திறக்கப்பட இருந்தது. இந்நிலையில் கடந்த 1-ம் தேதி கட்டிடத்தின் அடித்தள தூண்களில் விரிசல் ஏற்பட்டதால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன.

அன்று இரவே ஆய்வு செய்த நகரமைப்புக்குழும அதிகாரிகள் மற்றும் ஆட்சியர் சுந்தரவடிவேலு ஆகியோர் கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டனர். இதற்கிடையே கட்டிட உரிமையாளர்கள் தரப்பினர் தரைதளத்தில் ஜாக்கிகளை பொருத்தினர். ஜாக்கிகள் பொறுத்தியதால் அருகேயுள்ள 3 வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை மீண்டும் ஒரு உத்தரவை நகர குழுமம் பிறப்பித்தது. அதில் கொடுத்த கால அவகாசம் முடிந்து விட்டதால் நகர குழுமமே கட்டிடத்தை இடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் நேற்று நண்பகலில் மேல்மாடியில் இருந்து கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியது. டிரில்லிங் மெஷின் மூலம் மேல்தளத்தின் கைப்பிடி சுவர்களை இடிக்கத்தொடங்கினர். இதனால் இப்பகுதி முழுவதும் மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

நகரமைப்புக்குழும அதிகாரிகள் தரப்பில் கூறும்போது: விரிசல் ஏற்பட்ட கட்டிடத்தை இடிக்க காலதாமதம் செய்ததால் நாங்களே இடிக்கிறோம். சென்னையில் இருந்து நவீன இயந்திரம் வருகிறது. 2 மாடியை முதலில் இடிப்போம். தொழில்நுட்ப ஆலோசனைக்கு பிறகு மீதமுள்ள கட்டிடத்தை இடிப்போம் என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, அடுக்குமாடி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு ஐந்து நாட்களுக்கு பிறகுதான் இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அடுக்குமாடி கட்டிடத்தில் ஜாக்கி பயன்படுத்தியதால் அருகேயுள்ள 3 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. உரிய இழப்பீட்டை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியதால் மீட்பு வாகனம், தீயணைப்பு வாகனம், நவீன ஏணி ஆகியவற்றுடன் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE