மே 23, 24-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: கண்காட்சியில் பங்கேற்க ஏப்ரல் 25-க்குள் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யலாம் - தமிழக அரசு அறிவிப்பு

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி நடத்தப்படும் கண்காட்சியில் பங்கேற்க தொழில் நிறுவனங்கள் ஏப்ரல் 25-ம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்ப தாவது:

முதலீடு செய்வதற்கு ஏற்ற பகுதி, இயற்கை வளம் மற்றும் திறன் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட மாநிலம் என்ற அடிப்படையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பல ஆண்டுகளாக தமிழகத்தில் முதலீடு செய்து வருகின்றனர். வெளிநாட்டு முதலீடுகளை மேலும் ஈர்க்கும் விதமாக தமிழக அரசு சார்பில் மே 23, 24-ம் தேதிகளில் ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2015’, சென்னை வர்த்தக மையத்தில் நடத்தப்பட உள்ளது.

இதற்காக தமிழக தொழில் துறை, அயல்நாடுகளில் நடத்திய இரண்டு ‘ரோடு ஷோ’க்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதுதவிர உள்நாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் டெல்லியில் ‘ரோடு ஷோ’க்கள் நடத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து மும்பை, அகம தாபாத், புனே, கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடத்தப்பட உள்ளது.

இந்த முதலீட்டாளர் சந்திப்பில் உணவு பதப்படுத்துதல் மற் றும் வேளாண் தொழில், ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்னணு வன்பொருள்கள் உள்ளிட்ட 12 துறைகளின் கீழ் கண்காட்சியும் நடத்தப் படுகிறது.

இதில் பங்கேற்க விரும்புவோர் இம்மாதம் 25-ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். கண்காட்சிக்கான இடம் இலவசமாக அளிக்கப்படுகிறது. கண்காட்சியில் பங்கேற்கும் நிறுவனத்தை தேர்வு செய்ய பிரத்யேக தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பங்கேற்க விரும்புவோர் ‘www.tamilnadugim.com’ என்ற இணையதள முகவரி அல்லது 80562 02050, 99529 44630, 99942 12176 ஆகிய எண்களில் தொடர்புகொள்ள வேண்டும்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE