மெரினா வளைவுச் சாலை பணி: இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தரவு

சென்னை மாநகராட்சி சார்பில் விதிகளை மீறி மெரினா வளைவு சாலை அகலப்படுத்தப் படுவதாக சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன் தொடர்ந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 1-ம் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இப்பணிக்கு ஏற்கெனவே இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அட்வகேட் கமிஷனர் நியமிக்கப்பட்டு, சாலை பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கை தொடர்பான ஆட்சேபணைகளை, இன்று (ஏப்ரல் 16) தெரிவிக்க அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் வெங்கடேசன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-வது அமர்வில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

“மெரினா வளைவு சாலையில் சாலை புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ள தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தால் எத்தகைய சுற்றுச்சூழல் தாக்கங்கள் ஏற்படும் என்பது குறித்து முறையாக ஆய்வு செய்யப்படவில்லை. இந்த அனுமதியை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் இதுநாள் வரை அதன் இணையதளத்தில் வெளியிடவில்லை. அதனால் இத்திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த அமர்வின் உறுப்பினர்கள், மெரினா சாலை பணி மீதான இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தரவிட்டனர். பின்னர் மனு மீதான அடுத்த விசாரணையை மே 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE