உடலுழைப்பு இல்லாவிட்டால் பக்கவாதம் வரலாம்: மூளை நரம்பியல் நிபுணர் தகவல்

உடல் உழைப்பு இல்லாமல் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிபவர்களுக்கு பக்கவாதம் வர வாய்ப்புள்ளதாக மூளை நரம்பியல் நிபுணர் வி.நீதியரசு தெரிவித்தார்.

மதுரை நடைப் பயிற்சியாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் கே. அழகு தலைமையில் ரேஸ்கோர்ஸில் மருத்துவக் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மூளை நரம்பியல் நிபுணர் வி.நீதியரசு பேசியதாவது:

இதயத்துக்கு ரத்தம் கொண்டுச் செல்ல 3 ரத்தக் குழாய்கள் இருப்பதுபோல, மூளைக்குத் தேவையான ரத்தத்தை எடுத்துச் செல்ல 8 ரத்த குழாய்கள் உள்ளன. இந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு, வெடிப்பு ஏற்பட்டால் மூளைச் செல்கள் பாதிக்கின்றன.

உடல் உழைப்பின்றி ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், சரியான உணவுப் பழக்கம் இல்லாதவர்கள், நடைப் பயிற்சி மற்றும் உடல் பயிற்சி இல்லாதவர்கள், மன உளைச்சல் மற்றும் தவறான பழக்கம் ஆகிய காரணங்களால் பக்கவாதம் வர வாய்ப்புள்ளது.

உடலில் அதிக அளவில் சேரும் சர்க்கரை, கொழுப்பு போன்றவை ரத்த குழாய்களில் உள்ள என்டோதிலியம் என்ற உறையை சேதப்படுத்துகிறது. அதன் பிறகு கெட்ட கொழுப்பு படிந்து மாரடைப்பு அடைப்பு ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்போது மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் வெடிப்பு ஏற்படுகிறது.

அசைவ உணவுகளைக் குறைத்து, பொறித்த உணவுகள், பேக்கரி உணவுகள் தவிர்க்க வேண்டும். புகை பிடிததல், மது அருந்துதலை அறவே கைவிட வேண்டும்.

சிறிய வெங்காயம், பூண்டு, மஞ்சள் போன்ற மருத்துவ உணவுகள், சோயாபீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், தக்காளி, நெல்லிக்காய், வால்நட், பாதாம், பிஸ்தா போன்ற மூளைக்கு பலம் தரும் உணவுகள், கடல் மீன்கள், முட்டை வெள்ளைக்கரு ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE