நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டி: சீமான்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் இன எழுச்சிக் கருத்தரங்கம் சென்னை - அம்பத்தூரில் நடந்தது. அதில் சீமான் பேசும்போது, " 'தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு' என்பதை உலகுக்கு உணர்த்திய தலைவன் பிரபாகரன். தான் பெற்றெடுத்த பிள்ளைகளை களத்தில் பலிகொடுத்த தலைவர்தான் தலைவர் பிரபாகரன்.

இன்றைக்கு நாங்கள் பெரியாருக்கு எதிரி என்கிறார்கள். 'எதனையும் சுயஅறிவோடு சிந்தித்து செயல்பாடு' என்றார் பெரியார். ஆனால், இன்றைய பெரியாரியவதிகளோ, 'சொந்தப்புத்தி வேண்டாம்; பெரியார் தந்த புத்தி ஒன்றே போதும்' என்கிறார்கள்.

எல்லாவற்றிக்கும் ஆய்வுக்கு உட்படுத்து என்ற தந்தை பெரியாரை ஆய்வுக்கு உட்படுத்தவே தயங்குகிற இவர்கள் என்ன பெரியாரியவாதிகள்?

50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் என்ன தத்துவ மாற்றம் இருக்கிறது? இவர்களின் மொழிக்கொள்கையில் என்ன மாற்றம் இருக்கிறது?

திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் மணல்கொள்ளை, கனிமவள கொள்ளை, கொலை, கொள்ளை, பசி, பஞ்சம், பட்டினி,வறுமை, ஏழ்மை. அதனால்தான், முடிவுக்கு வந்தோம். திமுகவுக்கு மாற்று அதிமுக இல்லை. அதிமுகவுக்கு மாற்று திமுக இல்லை. காங்கிரசுக்கு மாற்று பாஜக இல்லை. பாஜகவுக்கு மாற்று காங்கிரசு இல்லை. நாமே மாற்று! நாம் தமிழரே மாற்று!

அதனால்தான், வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக இவற்றிற்கு மாற்றாக, தனித்தே 234 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவெடுத்து நாம் தமிழர் கட்சி களம் காண்கிறது.

நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டி என்பது தோற்பதற்கல்ல. தொடங்குவதற்கு. அதற்கு முன்பாக வருகிற மே 24, திருச்சியில் இன எழுச்சி மாநாட்டை நாம் தமிழர் கட்சி நடத்துகிறது. தமிழர் தேசிய இனத்துக்கான நாள் என அதில் ஒவ்வொரு தமிழரும் பங்கேற்க வேண்டும். தமிழர் வையத்தலைமை கொள்வதற்கு முன்பாக தான் பிறந்த மண்ணை தலைமை கொள்ள வேண்டும்" என்றார் சீமான்.



VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE