மதுரையில் மூடும் நிலையில் 6 மாநகராட்சி பள்ளிகள்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அதிர்ச்சி தகவல்

மதுரையில் 6 மாநகராட்சி பள்ளிகள் மூடும் நிலையில் இருப்பதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினரின் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த இயக்கத்தினர் மாநகராட்சி பள்ளிகள் குறித்து ஆய்வு செய்தனர். இது குறித்து அதன் மாவட்டச் செயலர் பொ.பாண்டியராஜன் நேற்று கூறியது:

மதுரை மங்கையர்கரசி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாநகராட்சியால் ரூ.2 லட்சத்துக்கு தனியார் பள்ளிக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மேலும் 2 பள்ளிகளை வாடகைக்கு விடப்போவதாக மேயர் அறிவித்தார். இந்த நடவடிக்கையானது கட்டாய கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானது.

இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆய்வு மேற்கொண்டது. இதில் மாநகராட்சியின் செயல்பாடு தமிழ்நாடு அரசின் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் அதன் கொள்கைகளுக்கு எதிராக உள்ளது தெரிகிறது.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி கிளை பள்ளிகள் வைக்கக் கூடாது. ஆனால், இந்த தனியார் பள்ளிக்கு மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. பள்ளிகளும், பள்ளி வளாகங்களும் கற்றல் கற்பித்தலுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் அரசு பள்ளிகளில் ரேஷன் கடைகள் கட்டப்பட்டுள்ளன. அரசியல் அலுவலகங்கள் கட்டுதல் போன்ற விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலை தொடர்ந்தால் அரசு பள்ளியின் ஒவ்வொரு பகுதியும் வாடகை கட்டிடங்களாக மாறி தனியாரிடம் போய் சேர்ந்துவிடும்.

கடந்த 2010-ம் ஆண்டு ஆய்வின்போது பள்ளிகளில் இருந்த சேர்க்கையை தக்க வைத்துக் கொள்வ தற்காக உறுதுணை மையங்களை அமைக்குமாறு மாநகராட்சிக்குப் பரிந்துரை செய்தோம். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இருபாலர் பள்ளிகளாக இருந்த பல பள்ளிகள் பெண்கள் பள்ளியாகவும், சில பள்ளிகள் ஆண்கள் பள்ளியாகவும் மாற்றப்பட்டுள்ளன. எனவே, மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகம் உள்ளனர்.

மதுரையில் உள்ள திருவாப்புடையார் கோயில் ஆரம்பப் பள்ளி, முனிச்சாலை ஆரம்பப் பள்ளி, கட்டபொம்மன் ஆரம்பப் பள்ளி, பாண்டித்துரை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, ஔவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, மாசாத்தியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன.

மாநகராட்சி பள்ளிகளில் கடந்த 5 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இதற்கான காரணங்களை ஆராயாமல் மாணவர் எண்ணிக்கை குறைவதை சுட்டிக்காட்டி பள்ளிகளை வாடகைக்கு விடுவது கல்வி வழங்குவதில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் போக்கை அரசு கடைப்பிடித்து வருவதை குறிப்பதாகும். இது கட்டாய கல்வி உரிமை சட்டத்துக்கு எதிரானது. ஆங்கில மோகத்தால் தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள் என்பதில் உண்மை இல்லை.

பள்ளிகளில் குடிநீர், கழிவறை, நூலகம், ஆய்வகங்கள் போன்ற அடிப்படை வசதி இல்லை. ஆரம்ப பள்ளிகளில் 28 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், மேல்நிலைப் பள்ளியில் 6 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரத்தில் உள்ளது. பள்ளிகளில் குறிப்பிட்ட பாடப்பிரிவுகள் இல்லை ஆகிய காரணங்களால் தான் மாணவர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE