நாகை மீனவர்கள் 37 பேர் சிறைபிடிப்பு: கோடியக்கரை அருகே இரவு நேரத்தில் சுற்றிவளைத்தனர்

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சிறைபிடிப்பதுடன், அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படும் என்று இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்து 48 மணி நேரம் முடிவதற்குள் அதை நிறைவேற்றி முடித்திருக்கிறது இலங்கை கடற்படை.

வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 37 பேரையும், அவர்களது 5 படகுகளையும், நேற்று முன்தினம் இரவு இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இது தமிழக மீனவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

நாகை அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 1-ம் தேதி கடலுக்குச் சென்று கோடியக்கரைக்கு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். பலரும் மீன்பிடித்துக்கொண்டு திரும்பிவிட சில படகுகளில் இருந்த மீனவர்கள் மட்டும் நடுக்கடலில் இந்திய எல்லைக்குள் வலைவிரித்து மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மனைவி முத்துலட்சுமி, கோவிந்தசாமி மகன் திருவளர்செல்வன், நாகப்பன் மகன் கந்தசாமி, சிவபெருமான் மகன் செந்தில்குமார், நாராய ணசாமி மகன் கனகராஜ் ஆகியோருக்குச் சொந்தமான 5 படகுகளையும், அதில் இருந்த 37 மீனவர்களையும் சிறைபிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

இதில் முத்துலட்சுமியின் படகில் அவரது மகன்கள் செல்வநாதன், விஜயநாதன் ஆகியோர் உட்பட 8 பேரும், திருவளர்செல்வன் படகில் செந்தில், ஜோதி உட்பட 7 பேரும், கந்தசாமி படகில் அவர் உட்பட 9 பேரும், செந்தில்குமார் படகில் அவர் உட்பட 6 பேரும், கனகராஜ் படகில் அவர் உட்பட 7 பேரும் இருந்தார்கள்.

இவர்கள் அனைவரையும் கைது செய்த இலங்கை கடற்படை அவர்களை காங்கேசன்துறைக்கு கொண்டு சென்றது. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவர்கள் அனைவரையும் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் தமிழக மீனவர்களை சுட்டுப் பிடிப்போம் என்று ஏற் கெனவே அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்த விரும்பு வதாகக் கூறிய இலங்கை அதிபர் சிறிசேனா, தமிழக மீனவர்களை கைது செய்வோம் என்று வெளிப் படையாக அறிவித்த கையோடு அதை செயல்படுத்தவும் தொடங்கி யுள்ளது தமிழக மீனவர்களின் எதிர்காலம் குறித்த பெரும் கேள்விக்குறியாகத்தான் கருதப்படுகிறது.

இந்நிலையில் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம் அருகில் நேற்று ராமேசுவரம் விசைப்பிடி மீனவ சங்கப் பிரதிநிதிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மீனவப் பிரதிநிதி போஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகள் தேவதாஸ், நம்புராஜன், சேசு, எமரிட் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மீனவ சங்கத் தலைவர் தேவதாஸ் கூறியதாவது:

தமிழக மீனவர்கள் குறித்து அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய கருத்துகள் இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கண்டனம் தெரிவிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.

வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட 37 நாகை மீனவர் களையும், இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர் களின் விசைப்படகுகளையும் மத்திய, மாநில அரசுகள் மீட்டுத் தரவேண்டும். இலங்கை கடற்படையினரால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் தர வேண்டும். இல்லையெனில் ஏப். 10-ம் தேதி ராமேசுவரம் தபால் நிலையத்தை முற்றுகையிடுவோம் எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE