அழிந்துவரும் கொடுக்காய்ப்புளி மரங்கள்: விவசாயிகள் கவலை

தமிழகத்தில் கொடுக்காய்ப்புளி மரங்கள் அழிந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சங்க இலக்கியத்தில் தமிழர்களின் தொன்மையான மரங்களில் ஒன்றாக கொடுக்காய்ப்புளி மரம் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த மரத்தின் காய்கள் எளிதில் உதிராது என்பதால் ‘உகா மரம்’ என்ற பெயரில் குறிப்புகள் காணப்படுகின்றன.

“கொடுக்காய்ப்புளி மரத்தின் கிளைகள் புறவு நிலம்போலக் காணப்படும். புறவு நிலம் என்பது முல்லை நிலத்தில் பயிர் செய்ய வயல் வயலாகத் தடுக்கப்பட்ட நிலம் ஆகும். கொடுக்காய்ப்புளி, இறால் மீன்போல சுருண்டு இருக்கும். பாலைநில மக்கள் வில்லில் அம்பு தொடுத்து கொடுக்காய்ப்புளி காய்களை வீழ்த்தி உண்பார்கள்” என சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 274-வது பாடலில் பாடல் ஆசிரியர் உருத்திரனார் விளக்குகிறார்.

பாசன வாய்க்கால் ஓரங்களில் செழித்து வளரக்கூடிய கொடுக்காய்ப்புளி மரங்களுக்கென்று தனியாக பாசன வசதி தேவையில்லை. இந்த மரங்கள் குட்டையாகவும், முட்களுடனும் இருப்பதால் வேலிக்காகவும் கிராமங்களில் நடுவதுண்டு. நன்கு வளர்ந்த கொடுக்காய்ப்புளி மரங்களில் தயாரிக்கப்படும் மரச்சாமான்கள் நீடித்து உழைக்கும்.

மருத்துவ குணம் கொண்ட கொடுக்காய்ப்புளி மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் ஆகியன மாதவிடாய் சிக்கல், நீர்க்கடுப்பு, ஆஸ்துமா போன்ற பல நோய் களுக்கு நிவாரணியாகவும் பயன்படுகிறது. இதன் இலைகள் ஆடு, முயல் உள்ளிட்ட விலங்குகளுக்கு சிறந்த தீவனமாகவும் விளங்குகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் பரவலாகக் காணப்பட்ட கொடுக்காய்ப்புளி மரங்கள் வேகமாக அழிந்து வருவது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த விவசாயி தரணி முருகேசன் ‘தி இந்து’விடம் கூறிய தாவது:

20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடை காலத்தில் சிவப்பான கொடுக்காய்ப்புளிகளை தின்பண்டங்களாக உண்ணாத சிறுவர், சிறுமிகள் இருந்திருக்கமாட்டார்கள். கொடுக்காய்ப்புளிகள் சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதால், கோடை காலத்தில் ஏற்படும் நோய்களைத் தடுக்கும் சக்தியாக விளங்கியது. ஆனால், இன்று கொடுக் காய்ப்புளியை அறியாத தலைமுறை உருவாகிக் கொண்டிருக் கிறது.

பறவைகளின் எச்சங்கள் மூலம் கொடுக்காய்ப் புளி விதைகள் வீட்டுத் தோட்டங்களிலும் விழுந்து, வளர்ந்து பல்லுயிர் பெருக்கமும் உண்டானது. ஆனால், இன்று பறவைகளுக்கு உரிய உணவு கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் கொடுக்காய்ப்புளி மரங்கள் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன.

தமிழர்களின் உணவு முறை பெருமளவில் மாற்றம் அடைந்துள்ளது. இதனால், நமது குழந்தைகள் அபாயகரமான தின்பண்டங்களை உண்டு ஆரோக்கியத்தை இழக்கின்றனர். நாம் மீண்டும் இயற்கை உணவுக்குத் திரும்பினால் இனிய வாழ்வை அடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE