பள்ளிகள் திறக்கும் ஜூன் 1-ம் தேதியே மாணவர்களுக்கு பாடப் புத்தகம் விநியோகம்: பள்ளிக்கல்வித்துறை செயலர் தகவல்

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கும் நாளான ஜூன் 1-ம் தேதியே அனைத்து மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்களை விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் டி.சபீதா தெரிவித்தார்.

2015-16-ம் நிதி ஆண்டுக்கான பள்ளிக்கல்வித் துறையின் கொள்கை விளக்க குறிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடந்த இந்த கூட்டத்துக்கு துறையின் முதன்மைச் செயலர் டி.சபீதா முன்னிலை வகித்தார்.

பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் மைதிலி ராஜேந்திரன், அனைவருக்கும் கல்வித் திட்ட மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை, தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், ஆர்.எம்.எஸ்.ஏ. திட்ட இயக்குநர் ஜி.அறிவொளி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி உள்பட பள்ளிக்கல்வித் துறையைச் சேர்ந்த இணை இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.

காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் பிற்பகல் வரை நீடித்தது. கூட்டத்துக்கு இடையே, பிளஸ் டூ, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் குறித்து அமைச்சர் கே.சி.வீரமணியிடம் நிருபர்கள் கேட்டபோது, “முதல்வரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு தேர்வு முடிவு தேதி அறிவிக்கப்படும்” என்றார். பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் சபீதா கூறுகையில், “அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாளான ஜூன் 1-ம் தேதி அன்றே அனைத்து மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE