செம்மரம் வெட்ட ஆந்திரா சென்றவர்கள் எத்தனை பேர்? - கூலித் தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுப்பு

By செய்திப்பிரிவு

செம்மரம் வெட்டச் செல்லும் கூலித் தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெறு கிறது. ஏற்காடு மலையில் உள்ள 64 கிராமங்களில் விவசாயம் மற்றும் காபி எஸ்டேட்டுகளிலும், கல்வ ராயன் மலைப்பகுதியிலும் பலர் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களை கொடைக்கானல் மலைப் பகுதியில் மரம் வெட்டுவதற்கு என்று சொல்லி, கூடுதல் கூலி அளிப்பதாக புரோக்கர்கள் ஆசை வார்த்தைகூறி, ஆந்திர மாநிலத்துக்கு செம்மரம் வெட்ட அழைத்துச் சென்றுவிடுகின்றனர். இதேபோல, அப்பாவி கூலித் தொழிலாளர்களையும் செம்மரம் வெட்ட அழைத்துச் செல்கின்றனர்.

இப்படி அழைத்து செல்பவர் களில் சிலர் வனத்துறையிடம் சிக்கி பலியாகும்போது, மரத்தில் இருந்து விழுந்து இறந்ததாக கூறி அடக்கம் செய்த சம்பவமும் நடந்துள்ளது. ஆந்திராவில் 20 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து செம்மரம் வெட்ட ஆந்திரா சென்ற கூலித் தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பில் அந்தந்த மாவட்ட போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் எஸ்.பி., சுப்புலட்சுமி கூறும்போது, கடந்த சில மாதங்களுக்கு முன் செம்மரம் வெட்டுவதற்காக ஆந்திர மாநிலம் சென்று ஊர் திரும்பிய 46 பேர், சொந்த ஊரில் பாதுகாப்பாக உள்ளனர். மேலும், யார் யார் ஆந்திராவுக்கு சென்றுள்ளனர் என்பதை கண்டறியும் பணியில் மாவட்ட போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். மரம் வெட்ட வெளியூர் சென்று ஊர் திரும்பாதவர்களின் குடும்பத்தினர் போலீஸாரிடம் புகார் அளிக்க முன் வருவதில்லை. இதனால், எத்தனை பேர் சென்றனர் என்பது குறித்து தெரியவில்லை என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE