கூடுதல் சிறுநீரக குழாயால் அவதிப்பட்ட சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை: அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

கூடுதல் சிறுநீரக குழாயால் பிறந்ததில் இருந்து தானாக சிறுநீர் வெளியேறும் பிரச்சினையில் அவதிப்பட்டு வந்த சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை செய்து, சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் மதிவாணன் (35). இவரது மனைவி பார்வதி (28). இவர்கள் இருவரும் அம்பத்தூர் அருகே பட்டரவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். இவர்களின் மகள் தேன்மொழிக்கு (13) பிறவியில் இருந்தே சிறுநீர் தானாக தொடர்ந்து வெளியேறி வந்துள்ளது. இதனால் ஆடைகள் நனைந்து சிறுநீர் துர்நாற்றம் வீசுவதால், சரியாக பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் தேன்மொழியை அவரது பெற்றோர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்து வமனையில் சேர்த்தனர். சிறுநீரக அறுவைச் சிகிச்சைத் துறைக்கு மாற்றப்பட்ட தேன்மொழிக்கு டாக்டர்கள் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை செய்தனர். பரிசோதனையில் வலது பக்க சிறுநீரகத்தில் இருந்து வெளியே வரும் சிறுநீரக குழாய் சிறுநீரகப் பையில் சரியாக இணைந்து இருந்தது. ஆனால் இடது பக்க சிறுநீரகத்தில் இரண்டு குழாய்கள் இருந்தன. ஒரு குழாய் சிறுநீரகப் பையில் சரியாக இணைந்து இருந்தது. ஆனால் கூடுதலான மற்றொரு குழாய் சிறுநீரகப் பைக்கு செல்லாமல், பிறப்பு உறுப்பில் சென்று நேரடியாக இணைந்து இருந்தது. இதனால் பிறப்பு உறுப்பின் வழியாக சிறுநீர் தொடர்ந்து வெளியேறி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சிறுநீரக அறுவைச் சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் கே.தியாகராஜன் தலைமையில் டாக்டர்கள் வி.செல்வ ராஜ், இளம்பரிதி, கருணாமூர்த்தி, சிவசங்கர் தலைமையிலான குழுவினர் 3 மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்து பிறப்பு உறுப்புக்கு செல்லும் சிறுநீரக குழாயை வெட்டினர். அதன்பின் அந்த சிறுநீரக குழாயை, சிறுநீர் பைக்கு செல்லும் மற்றொரு குழாயுடன் இணைத்தனர். இதன் மூலம் தானாக சிறுநீர் வெளியேறுவது முற்றிலும் தடுக்கப்பட்டது.

உலகில் முதல் முறை

இதுதொடர்பாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் ஆர்.விமலா, சிறுநீரக அறுவைச் சிகிச்சைத் துறை பேராசிரியர் டாக்டர் வி.செல்வ ராஜ், மருத்துவ துணைக் கண் காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் நிருபர்களிடம் கூறிய தாவது:

உலகிலேயே முதல் முறையாக கூடுதல் சிறுநீரக குழாய்க்கு அறுவைச் சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளோம். அறுவைச் சிகிச்சைக்கு பிறகு சிறுமி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத் தின் மூலம் இலவசமாக செய்யப்பட்டுள்ள இந்த அறு வைச் சிகிச்சையை, தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுபற்றி சிறுமி தேன்மொழி கூறும்போது, “தானாக சிறுநீர் வெளியேறும் பிரச்சினை காரண மாக என்னை பள்ளியில் எல்லோரும் கிண்டல் செய்துவந்தனர். அதனால் எனக்கு பள்ளிக்கு போகவே பிடிக்காது. இனி நான் உற்சாகமாக பள்ளிக்கு செல்வேன்” என்றார்.

சிறுமியின் பெற்றோர் கூறும் போது, “எங்கள் மகளை குணப் படுத்திய டாக்டர்களை வாழ்நாளில் மறக்க மாட்டோம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE