பீன்ஸ் விலை கடும் உயர்வு: 1 கிலோ ரூ.100-க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு மற்றும் சில்லறை மார்க்கெட்டுகளில் பீன்ஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சில்லறை மார்க்கெட்டுகளில் 1 கிலோ பீன்ஸ் நேற்று ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.30-க்கும், சில்லறை மார்க்கெட்டுகளில் ரூ. 45-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் விலை தற்போது திடீரென உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.75-க்கும், தமிழக அரசின் பண்ணை பசுமை காய்கறி கடையில் ரூ.76-க்கும், சில்லறை மார்க்கெட்டுகளில் ரூ.100-க்கும் பீன்ஸ் விற்கப்படுகிறது.

இந்த திடீர் விலை உயர்வு குறித்து கோயம்பேடு மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது:

தமிழகத்தில் ஊட்டியில் விளையும் பீன்ஸ் கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்ட மக்களின் தேவைகளையும், கொடைக்கானலில் விளையும் பீன்ஸ் மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. சென்னைக்கு கர்நாடக மாநிலத்திலிருந்தும், ஆந்திர மாநிலத்திலிருந்தும் பீன்ஸ் வருகிறது. இம்மாநிலங்களில் தற்போது கோடை தொடங்கியிருப்பதால், போதிய நீர் இன்றி, விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் நாளொன்றுக்கு 200 டன்னாக இருந்த பீன்ஸ் வரத்து தற்போது 100 டன்னாக குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளது. இன்னும் சில மாதங்களுக்கு பீன்ஸ் விலை குறைய வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE