45 நாள் மீன்பிடி தடைக்காலம் அமல்: கேரள படகுகள் அத்துமீறுவதை தடுக்க மீனவர்கள் வலியுறுத்தல்

மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி அத்துமீறும் கேரள படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மீன்களின் இனப்பெருக்கத்தை ஊக்கப்படுத்தி, கடல் சுற்றுச்சூழலை சமன் செய்யும் நோக்கத்தில் ஆண்டுதோறும் 45 நாட்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க தடையில்லை.

தூத்துக்குடி

கிழக்கு கடற்கரை பகுதியில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று அமலுக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் 365 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த தடைக்காலத்தை பயன்படுத்தி விசைப்படகுகளுக்கு வர்ணம் பூசுதல், சிறு சிறு கோளாறுகளை சீரமைத்தல், வலைகளை சரி செய்தல், புதிய வலை தயார் செய்தல் போன்ற பணிகளை மீனவர்கள் மேற்கொள்வர். அதன்படி நேற்றே பராமரிப்பு பணிகளை மீனவர்கள் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், 45 நாள் தடைக்காலத்தில் கேரளத்தை சேர்ந்த விசைப்படகுகள் அத்துமீறி வந்து மீன்பிடிக்க வாய்ப்புள்ளது. அதனைத் தடுக்க வேண்டும் என்று, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆட்சியர் அறிவுறுத்தல்

இதுதொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள், காவல் துறையினர், கடலோர காவல் படை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் ஆலோசனை நடத்தினார். கடலோர காவல் படையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என, ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்பேரில் பிற பகுதி விசைப்படகுகள் இந்த பகுதிக்கு வந்து தடைக்காலத்தில் மீன்பிடிப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

61 நாள் தடை இல்லை

மீன்பிடி தடைக்காலத்தை 61 நாட்களாக அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, இங்கு 61 நாட்கள் தடை கிடையாது. வழக்கம் போல் 45 நாட்கள் தடை மட்டுமே அமலில் இருக்கும் எனவும் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்னமுட்டம் மீன்பிடி தளத்திலிருந்து செல்லும் 350 விசைப்படகுகள் நேற்று முதல் கடலுக்கு செல்லவில்லை.

கன்னியாகுமரி மீனவர்கள் கூறும்போது, ‘மீன்பிடி தடைக்காலங்களில் அத்துமீறும் கேரள விசைப்படகு மற்றும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மீன்வளத்துறை, கடலோர காவல்குழும போலீஸார் இணைந்து இதற்கான நடவடிக்கையில் இறங்கவேண்டும். கிழக்கு கடற்கரை பகுதியில் தடைக்காலம் அமல்படுத்தும் போது, மேற்கு கடற்கரை பகுதிகளிலும் மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்த வேண்டும்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE