ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் பெண்களிடம் 20 பவுன் நகை பறிப்பு: வடமாநில கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்

ஓடும் ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் 20 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையர்களை ரயில்வே போலீஸார் தேடி வருகின்றனர்.

பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 1.30 மணிக்கு ஜோலார்பேட்டை அடுத்த பச்சூர் - சோமநாயக்கன்பட்டி இடையே, சிக்னல் காரணமாக மிதமான வேகத்தில் வந்தது. அப்போது பச்சூர் பகுதியில் பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் மெதுவாக வந்த ரயிலின் எஸ்-5, எஸ்-12 மற்றும் எஸ்-11 ஆகிய 3 பெட்டிகளில் உள்ளே புகுந்தது.

ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த 4 பெண்களிடம் இருந்து தங்கச் சங்கிலியை கொள்ளையர்கள் பறித்தனர். சங்கிலி அறுக்கப்படுவதை உணர்ந்த சென்னை கொளத்தூர் சின்னப்பா நகரைச் சேர்ந்த முரளி மனைவி பிரியா (28), சென்னை கீழ்பெரம்பலூரைச் சேர்ந்த வேடியப்பன் மனைவி சுதா (48), காட்பாடி மிஷன் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் மகள் ரோஸ்லின்மேரி (27), சென்னை கொரட்டூரைச் சேர்ந்த தர் மனைவி சாரு (34) ஆகியோர் அடுத்தடுத்து கூச்சலிட்டனர். இதை கேட்ட சக பயணிகள் கண் விழித்தனர்.

உடனே, ரயிலில் உள்ள அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய கொள்ளையர்கள் கீழே குதித்து சோமநாயக்கன்பட்டி வழியாக தப்பிச் சென்றனர். ரயில் ஜோலார்பேட்டை வந்ததும், நகைகளை பறிக்கொடுத்தவர்கள் ரயில்வே போலீஸில் புகார் செய்தனர். வழக்கு பதிவு செய்த போலீஸார் மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கொள்ளை சம்பவம் நடந்த ஜோலார்பேட்டை அடுத்த பச்சூர் சோமநாயக்கன்பட்டி இடையே ரயில்வே போலீஸ் ஐஜி சீமா அகர்வால், ரயில்வே எஸ்பி விஜயகுமார் மற்றும் போலீஸார் நேற்று மாலை நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

கொள்ளையர் அனைவரும் வடமாநிலத்து இளைஞர்கள் போல இருந்ததாக நகைகளை பறிகொடுத்த பெண்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து கொள்ளையர்களை விரைந்து பிடிக்க ரயில்வே போலீஸாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். வேலூர் மாவட்டம் வழியாக செல்லும் ரயில்களில் பயணிகளிடம் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடப்பதால், ரயில்வே போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE