சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்: முதல்வர் மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

“சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும்” என டெல்லியில் நடந்த முதல் வர்கள், நீதிபதிகள் மாநாட் டில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி னார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மாநில முதல்வர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் பங்கேற்றனர். மாநாட்டில் முதல்வர் பன்னீர் செல்வம் பேசியதாவது:

தமிழகத்தில் ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வரு கிறது. இதை கருத்தில் கொண்டு, 2015-16-ம் ஆண்டு பட்ஜெட்டில், நீதித்துறைக்கு, ரூ.809.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில், நீதிமன்றங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, ரூ.375 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும், 986 கீழமை நீதிமன்றங்களில்,88 சதவீதம் சொந்த கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன.

மீதமுள்ள, 12 சதவீதம் நீதிமன்றங்களுக்கான கட்டிடங்கள் கட்ட, ரூ.157.44 கோடி நிதிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

நீதித்துறை கட்டமைப்புக்கான மத்திய அரசின் பங்களிப்பு திட்டத்தில், 2010-11, 2011-12-ம் ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த நிதியும் கிடைக்கவில்லை.

ஆனால், தொடர் முயற்சியின் காரணமாக 2012-13-ம் ஆண்டுக்கு ரூ.19.53 கோடியும், 2013-14-ம் ஆண்டுக்கு ரூ.73.43 கோடியும் கிடைத்தது. இதே அளவு ஒதுக்கீடு அடுத்த 2 ஆண்டுகளுக்கும் கிடைக்கும் பட்சத்தில், 2017-ம் ஆண்டுக்குள் அனைத்து நீதிமன் றங்களுக்கும் சொந்த கட்டிடத்தை தமிழக அரசு கட்டி முடிக்கும்.

தமிழகத்தில் 352 நீதிமன்றங்கள், 169 சிறை வளாகங்களில் வீடியோ கான்பரன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களால், பெண்கள் சட்டத் தின் பயனை பெறுவதில் முதன்மை மாநிலமாகவும், பெண்கள் பாதுகாப்பை உணரும் மாநிலமாகவும் திகழ்கிறது. கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், 1992-ல் தமிழகத்தில்தான் முதல்முதலாக, ஒவ்வொரு போலீஸ் உள்சரகத் திலும், அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. 2002-ல் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம் கொண்டு வரப்பட்டு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான வழக்குகளில் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில், சிறார் நீதிக்கழகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் எல்லா மாவட்டங்களிலும் அமைக்கப்பட் டுள்ளன. ஒருங்கிணைந்த குழந்தை கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தமிழகத்தில்1,507 குழந்தைகள் நல மையங்கள் பதிவு செய்யப்பட்டு இயங்குகின்றன.

தமிழக அரசு, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமி ஷனை உருவாக்கியுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு மையங் களின் நலனுக்காக, தமிழக அரசு ரூ.7.59 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியின் மூலம், குழந்தை களுக்கான பயிற்சி வழங்குதல், கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துதல், விளையாட்டு உபகரணங்கள் வாங்கு தல் உள்ளிட்ட பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை உயர் நீதிமன்ற வளா கத்தில், குறைதீர் மையம் ரூ.4.20 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், மாவட்ட தலைநகரங்களில், 29 மையங்கள் அமைக்கப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் குறைதீர் மையத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதலாக ரூ.1.95 கோடி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2013-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி நடந்த தேசிய லோக் அதாலத் மூலம், தமிழகத்தில் 13,77,252 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, ரூ.1,140 கோடிக்கும் அதிகமாக நிவாரணம் பெற்றுத்தரப்பட்டது. அதேபோல், 2014 டிசம்பர் 6-ம் தேதி நடந்த தேசிய லோக் அதாலத்தில், 24,73,212 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, ரூ.2,081 கோடிக்கும் அதிகமாக நிவாரணம் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில், லோக் அதாலத், மெகா லோக் அதாலத் மற்றும் சட்டம் குறித்த விழிப்புணர்வு மையங்களுக்காக ரூ.14.83 கோடி செலவிடப்பட்டுள்ளது. நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள் மற்றும் வழக்கறிஞர் களுக்கு, யோகா பயிற்சிக்காக, ரூ.5.43 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 32 மாவட்டங் களிலும், ரூ.7.70 கோடி செலவில், நிரந்தர லோக் அதாலத்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, உயர் நீதிமன்ற தீர்ப்புகள், வழக்காடுதல் இவற்றில் மாநில மொழியான தமிழை பயன்படுத்த வேண்டும் என்பதை சென்னை உயர் நீதிமன்றம் இதுவரை ஏற்கவில்லை.

இந்த விஷயத்தில், உச்ச நீதிமன்றம் தன் முடிவை, மறுபரிசீலனை செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை பயன்படுத்துவது தொடர்பான நீண்ட நாள் கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.



VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE