ரேஷன் கடை ஊழியர் மரணத்தில் நீதி விசாரணை தேவை: விஜயகாந்த்

ரேஷன் கடை ஊழியர் இளங்கோவன் மரணம் குறித்து தமிழக அரசு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'' சென்னையில் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் இளங்கோவனுக்கு அதிகாரிகள் கொடுத்த நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்டதாக வெளியான செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இளங்கோவன் எழுதியதாக கைப்பற்றப்பட்ட கடிதத்தில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையை தொடர்ந்து அவர்கள் கொடுத்த நெருக்கடியால் மன உளைச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாகவும், அவர் எழுதிய இந்த கடிதத்தையே மரண வாக்குமூலமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே இதுபோன்ற ரேஷன் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி சமீபத்தில் வெளிவந்தது. தற்போது இறந்துள்ள இளங்கோவன் மீது தனிப்பட்ட காரணங்கள் கூறப்பட்டாலும், இந்த ஆட்சியில் அரசு அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை தற்கொலை செய்தி வந்துகொண்டிருப்பதால் இந்த தற்கொலையின் பின்னணி லஞ்சமா, ஊழலா, தனிப்பட்ட காரணமா என்னவென்று மக்களுக்கு தெரிவிக்க இந்த அரசு கடமைப் பட்டுள்ளது.

இன்றைக்கு தமிழகத்தில் அரசு அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு ஊழியர்களும் ஒரு விதமான சொல்லமுடியாத மன அழுத்தத்தோடு அலுவலகத்தில் பணிபுரிவதாகவும் பொது மக்கள் சேவையில் பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரியவருகிறது. இதனால் தமிழக மக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே எந்த சுயசார்பும் இல்லாத நடுநிலையான ஒரு நீதி விசாரணை குழுவை அமைத்து மக்களுக்கு உண்மையை தெரிவித்திட வேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE