இன்று ஐஐடி மெயின் நுழைவுத் தேர்வு

ஐஐடிகளுக்கான - ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறு கிறது.

இந்த ஆண்டு 13 லட்சத்து 3ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். இது கடந்த ஆண்டு விண்ணப்பித்தவர்களை விட 50ஆயிரம் குறைவாகும். இந்த நுழைவுத் தேர்வை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் ஐஐடி, என்.ஐ.டி மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களில் பொறியியல் படிப்பதற்காக நடத்துகிறது.

ஆப்லைனில் எழுதப்படும் இந்த தேர்வு இரண்டு பகுதிகளை கொண்டது. முதல்தாள் பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளுக்காக நடத்தப்படுகிறது. இதில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் தாள் கட்டிட கலை மற்றும் திட்டக் கலை பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் கணிதம் மற்றும் வரைதல் திறன்கள் குறித்து கேள்விகள் கேட்கப்படும்.

மொத்தமாக 96 கேள்விகள் கொண்ட இந்த தேர்வில் ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடைக்கு 1 மதிப்பெண் கழிக்கப்படும்.

இந்த தேர்வுகளில் வெற்றி பெறும் முதல் 1.5 லட்சம் மாணவர்கள் ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். அதில் வெற்றி பெற்றால்தான் ஐஐடியில் சேர முடியும்.

ஆன்லைன் தேர்வுகள் ஏப்ரல் 10, 11 தேதிகளில் 283 மையங்களில் நடைபெறும். ஆப்லைன் தேர்வு ஒரு சில மையங்களில் மட்டுமே நடைபெறும். தமிழகத்தில் கோவை, மதுரை ஆகிய இடங்களில் மட்டும் இந்த தேர்வு இன்று நடைபெறுகிறது.

வெளிநாடுகளில் ஷார்ஜா, ரியாத், மஸ்கட், துபாய், பஹ்ரைன் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE