அருங்காட்சியகமாக மாறும் வேலூர் காட்சிக் கூடம்: தொல்லியல்துறை துணை கண்காணிப்பாளர் தகவல்

வேலூரில் உள்ள அரசு காட்சிக் கூடத்தை அருங்காட்சியகமாக மாற்ற அனுமதி கோரப்பட்டுள்ளதாக சென்னை வட்ட தொல்லியல்துறை துணை கண்காணிப்பாளர் கு. மூர்த்தீஸ்வரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

நாடு முழுவதும் 44 அருங்காட்சியகங்கள் உள்ளன. தமிழகத்தில் சென்னையில் உள்ள அருங்காட்சியகம் ஒன்று மட்டுமே உள்ளது. வேலூர் மற்றும் தஞ்சையில் அருங்காட்சிக் கூடங்கள் உள்ளன. இதில் வேலூர் அருங்காட்சிக் கூடத்தை அருங்காட்சியகமாக மாற்றுவதற்கான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை அருங்காட்சியகம் 1790-ம் ஆண்டு கட்டப்பட்டது. முதலில் இது ஏலக் கூடமாகவும் அதன் பின் வங்கியாகவும் அதிகாரிகள் உணவகமாகவும் கலங்கரை விளக்கமாகவும் செயல்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் கலங்கரை விளக்கம் இந்த கட்டிடத்தில் இருந்ததற்கான ஆதாரம் இந்த கட்டடத்தில் இன்றும் உள்ளது. கடந்த 1948ம் ஆண்டு தான் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் உள்ளன. இந்தியா சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நாட்டின் ஆறு இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அப்போது புனித ஜார்ஜ் கோட்டையில் ஏற்றப்பட்ட தனிப்பட்டால் ஆன கொடி இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடக்கவுள்ளது.

இவ்வாறு மூர்த்தீஸ்வரி கூறினார்.





VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE