20 பேர் என்கவுன்ட்டர் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்: எவிடென்ஸ் அமைப்பு கோரிக்கை

தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை, வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என ‘எவிடென்ஸ்’ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, அந்த அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

வெங்கடேசன் என்ற ஏஜென்ட்தான் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேரை மரம் வெட்ட அழைத்துச் சென்றிருக்கிறார். 6-ம் தேதி இரவு 7 மணியளவில் நகரி அவுட் போஸ்ட்டில் வைத்து அவர்களை ஆந்திர போலீஸ் கைது செய்துவிட்டது. இதை இரவு 9 மணியளவில் அவர்களது உறவினர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார் வெங்கடேசன்.

மறுநாள் விடிவதற்குள் அவர்ளோடு சேர்த்து 20 பேரை சுட்டுக் கொன்றுவிட்டனர். அன்று மாலை 5 மணியளவில், சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் ஆந்திர போலீஸ் விசாரணை நடத்தி இருக்கிறது. இதை வைத்துப் பார்த்தால், 20 பேரையும் பிடித்து அவர்களைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் கேட்டு வாங்கிக் கொண்டு அதன் பிறகு சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

சம்பவத்துக்கு பிறகு, ஏஜெண்ட் ஒருவர் மூலமாக, பலியானோர் சிலரது குடும்பங்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது. இதுபோன்ற உத்தரவாதங்களால், பாதிக்கப்பட்டோரிடம் இருந்து ஏஜென்ட்கள் பற்றிய தகவல்களை பெற முடியவில்லை.

செம்மரக் கடத்தல் மாஃபியாக்களில் ஆந்திர அரசியல்வாதிகளின் பின்புலம் உள்ளதால், அவர்களில் ஒருவரைக் கூட கைதுசெய்யவில்லை. அதே நேரம், மரங்களை வெட்டியதாக சுமார் 3,500 தமிழக கூலித் தொழிலாளர்கள் ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றங்களை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லாததால் இவர்களில் பெரும் பகுதியினர் விடுதலையாகும் நிலையில் இருக்கிறார்கள்.

இந்தச் சூழலில்தான் முறையாக வழக்கை நடத்தி தண்டிக்க முடியாததால் 20 பேரை ஒரே நேரத்தில் சுட்டுக் கொன்று ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கை சி.பி.ஐ-யும் உச்ச நீதிமன்றமும் இணைந்து விசாரித்தால்தான் உண்மைகள் வெளிவரும். உச்ச நீதிமன்றம் தாமாகவே முன்வந்து இந்த வழக்கின் விசாரணையை வெளி மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றார் கதிர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE