முதலீட்டாளர்கள் மாநாட்டால் என்ன பயன்?- தமிழக அரசுக்கு வைகோ கேள்வி

By செய்திப்பிரிவு

மின் உற்பத்தித் திட்டங்களை விரைந்து நிறைவேற்றி, அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தாமல், தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப்போவது இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'' தமிழக அரசின் சார்பில் மே மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் வேண்டுகோளை ஏற்று, மாநாடு நடைபெறும் தேதி, மாற்றப்பட்டு உள்ளதாக தமிழக அரசு கூறி இருக்கிறது.

சர்வதேச முதலீட்டாளர்களின் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டதற்கு உண்மையான காரணம் என்ன என்பதை அதிமுக அரசு வெளிப்படையாகச் சொல்ல முடியாது. ஆனாலும் மக்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அரசின் நிலை நன்றாகத் தெரியும். அதிமுக அரசு பொறுப்பு ஏற்ற 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்தால் தமிழகத் தொழில் வளர்ச்சியின் நிலை என்ன என்பது புலப்படும்.

2011 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டுக்கு வந்த தொழில் முதலீடுகள் மதிப்பு 73,348 கோடி ரூபாய்.

2012 இல் 21,253 கோடி ரூபாய்

2013 இல் 27,380 கோடி ரூபாய்

2014 இல் 14,349 கோடி ரூபாய்

கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துபோய் இருக்கிறது. இதற்கான அடிப்படைக் காரணம், தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டுக்குச் சாதகமான சூழல் இல்லை. கடுமையான மின் தட்டுப்பாடு, அரசு நிர்வாகத்தில் புரையோடிக் கிடக்கின்ற ஊழல்கள் போன்றவற்றால் எந்த நிறுவனமும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுவது இல்லை.

தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட ஹூண்டாய் கார் தொழிற்சாலை விரிவாக்கம் ராஜஸ்தான், குஜராத் மாநிலத்துக்குச் செல்லத் திட்டமிட்டு இருக்கின்றது. மகேந்திரா நிறுவனத்தின் ரூபாய் 4,000 கோடி மதிப்பிலான மோட்டர் வாகனத் தொழிற்சாலை அனுமதிக்காகக் காத்துக் கிடக்கின்றது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வந்த இந் நிறுவனம் ஆந்திராவை நோக்கிப் போய்விட்டது.

பிரான்சு நாட்டின் செயிண்ட் கோபைன் நிறுவனம் சென்னைக்கு அருகில் கண்ணாடித் தொழிற்சாலை தொடங்கியது. இதன் விரிவாக்க ஆலை 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜஸ்தான் மாநிலத்துக்குச் சென்றுவிட்டது.

தமிழ்நாட்டில் இயங்கும் ராம்கோ சிமெண்ட் நிறுவனம் ஆண்டுக்கு 2.5 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் தனது சிமெண்ட் தொழிற்சாலையை ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் அமைக்க அனுமதியைப் பெற்றுள்ளது.

சென்னையில் இயங்கிவரும் போர்டு கார் தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டங்கள் குஜராத் மாநிலத்துக்குக் கொண்டுபோகப்பட்டுள்ளன. தொழில் முதலீடுகளை அதிமுக அரசு ஈர்த்துள்ள லட்சணம் இதிலிருந்து தெளிவாகிறது.

கடந்த மூன்று ஆண்டுக் காலத்தில் அந்நிய நேரடி முதலீடுகள் 31,706 கோடி ரூபாய்க்கு வந்ததாகவும், இதற்காகத் தமிழக அரசு 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளதாகவும், இதில் 14,305 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறி வருகிறது.

ஆனால், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி விகிதம் என்பது மைனஸ் 1.3 விழுக்காடு என்று மத்திய திட்டக்குழு உறுப்பினர் அபகிஜித் சென் கடந்த ஆண்டு சுட்டிக்காட்டினார். கடந்த 4 ஆண்டுகளில் உற்பத்தித் தொழில்துறையும், வேளாண்மைத் துறையும் தமிழ்நாட்டில் பெரும் சரிவை நோக்கிச் சென்றதால், ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் 2010-11 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 13.12 விழுக்காடு,

2011-12 இல் 7.42 விழுக்காடு,

2012-2013 இல் 4.14 விழுக்காடு

2013-14 இல் 5 விழுக்காடு.

இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு அதிமுக அரசின் செயல்பாடுகள்தான் காரணம் ஆகும்.

மின் உற்பத்தித் திட்டங்களை விரைந்து நிறைவேற்றி, அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தாமல், அதிமுக அரசு தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை மே அல்லது செப்டம்பர் மாதம் நடத்தினாலும் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப்போவது இல்லை'' என்று வைகோ கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்