காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல்லுக்கே முன்னுரிமை: சிறுதானிய சாகுபடி பரப்பு குறைந்தது - அரசு ஊக்கப்படுத்த தவறிவிட்டதாக புகார்

By கோ.கார்த்திக்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுதானியம் மற்றும் பயறு வகைகளின் சாகுபடி பரப்பளவு, கடந்த ஆண்டை விட பெருமளவு குறைந்துள்ளது. அரசு போதிய மானியம் வழங்கி ஊக்கப்படுத்தாததும், சிறுதானியங்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்யாததும், வெளிச்சந்தையில் குறைந்த விலை கிடைப்பதுமே இதற்கான காரணங்கள் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனினும், நெல் பயிரிடுவதிலேயே விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுவதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் துறை விளக்கமளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2013-4ம் ஆண்டில் 330 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் சிறுதானிய வகைகளை பயிரிட்டனர். இந்த பரப்பளவு 2014-15 ஆண்டில் 47 ஹெக்டேர் குறைந்து 283 ஹெக்டேராக உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் ஆய்வு கூட்டத்தில் வேளாண்துறை தெரிவித்துள்ளது. இதே போல், பயறு வகைகள் சாகுபடி பரப்பளவு 1,239 ஹெக்டேரில் இருந்து, 1054 ஹெக்டேராக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காஞ்சி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலர் நேரு கூறியதாவது: சிறுதானியம் மற்றும் பயறு வகைகளின் சாகுபடி குறைவுக்கு பருவமழையில்லாதது முதல் காரணம். மழையில்லை என்ற போதும் குறைந்த அளவில் உயிர் நீரிட்டு சிறுதானியங்களை பயிரிடுவதற்கான ஊக்கத்தை மாவட்ட வேளாண் துறை வழங்கவில்லை. அரசு உதவிகள் திருப்திகரமாக இல்லாததால், சில விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்பனை செய்துள்ளனர்.

செய்யூர் மற்றும் சித்தாமூர் பகுதிகளில் விளை நிலங்களை வாங்கியவர்கள், அதில் மா, கொய்யா மற்றும் மரங்களை பயிரிட்டு தோட்டங்களாகவும், சில இடங்களில் பண்ணை வீடுகளும் அமைத்துள்ளனர். இதனால், சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. வேர்கடலை, கேழ்வரகு மற்றும் காய்கறிகளை பயிரிட்டு நல்ல மகசூல் கிடைத்தாலும், அரசு நேரடி கொள்முதல் செய்வதில்லை. வெளிச்சந்தையிலும் குறைந்த விலையே கிடைப்பதால், விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை.

அரசின் மூலம் மானிய விலையில் வழங்கப்படும் நீர்தெளிப்பான் இயந்திரங்கள் முறையாக விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. நீர் தெளிப்பான் இயந்திரம் வெளிச்சந்தையில் ரூ.4,500. ஆனால், அரசு மானிய விலையில் வழங்கும் நீர் தெளிப்பான் இயந்திரம் ரூ.6,400 இதையும் 50 சதவிகித மானியத்திலேயே வழங்குகின்றனர்.

விவசாயிகள் ஊக்கப்படுத்தும் வகையில் பூச்சி மருந்துகள் மற்றும் நீர் தெளிப்பான் இயந்திரங்களுக்கு முழுமானியம், விவசாய கிணறுகள் அமைக்க மானியம் மற்றும் சிறுதானியம் பயிரிடும் வகையில் ஊக்கப்படுத்தி ஆலோசனைகள் வழங்கி, நேரடி கொள்முதல் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் துறை துணை இயக்குநர் சீதாராமன் கூறியதாவது: சிறுதானியம் மற்றும் பயறுகளை சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்த, மாவட்டம் முழுவதும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பிஸ்கட் தயாரிக்க பயன்படும் வரகு போன்றவற்றை விளைவிக்க விவசாயிகள் முன்வந்தால் நிச்சயம் பெரியளவில் லாபம் கிடைக்கும்.

விவசாயிகள் நெல் பயிரிடுவதையே பிரதானமாக செய்து வருகின்றனர். இதனால், சிறுதானியத்தின் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளதே தவிர, அரசு ஊக்கப்படுத்தவில்லை என்பது ஏற்புடையதல்ல. பெரிய அளவில் சாகுபடி இருந்தால் கொள்முதல் தொடர்பாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பரிசீலனை செய்யலாம் என்பது என்னுடைய கருத்து.

அதனால், விவசாயிகள் நெல் பயிரிடுவதை மட்டுமே நம்பியிருக்காமல் சிறுதானியங்களை பயிரிட முன்வரவேண்டும். விவசாய கிணறு வெட்ட மானியம் பெறுவதற்கு வேளாண் பொறியியல் துறையில் முறையிடலாம் என்று அவர் தெரிவித்தார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்