அதிமுக முன்னாள் ஒன்றியக் குழு தலைவரை கைது செய்ய வந்த போலீஸாருடன் பாஜகவினர் தள்ளுமுள்ளு

சுங்குவார்சத்திரம் அருகே பன்னாட்டு தொழிற்சாலை உள்ளது. 2 நாட்களுக்கு முன்பு தொழிற்சாலைக்குச் சென்ற ஸ்ரீபெரும்புதூர் அதிமுக ஒன்றி யக் குழு தலைவர் வெங்கடேசன், புதிய கட்டிடம் கட்ட ஒப்புதல் அளிக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

சுங்குவார்சத்திரம் போலீஸில் வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக அதிமுக தலைமை அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக அவரை போலீஸார் கைது செய்ய முயன்றனர். இதையறிந்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காஞ்சிபுரம் பாஜக அலுவலகத்துக்கு வந்த வெங்கடேசன், அக்கட்சியின் மாவட்ட தலைவர் பலராமன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாஞ்சி போலீஸார் வேறொரு வழக்கில் வெங்கடேசனை கைது செய்வதற்காக வந்தனர். போலீஸாரைக் கண்டதும் காரில் ஏறி கதவுகளை மூடிகொண்ட அவர் உள்ளேயே இருந்தார். அவரை கைது செய்வதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில், நீண்ட நேரம் காரின் கதவுகள் மூடப்பட்ட நிலையில் உள்ளேயே அமர்ந்திருந்ததால் வெங்கடேசனுக்கு திடீரென முச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறி, சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால், போலீஸார் செய்வதறியாமல் திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE