கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி சென்னை மாநகரம்: கிருஷ்ணா நதி நீர் வரத்தால் தீர்வு கிடைக்குமா?

சென்னை மாநகரம் எதிர்நோக்கி இருக்கும் குடிநீர் பிரச்சினைக்கு கிருஷ்ணா நதிநீர் வரத்து மட்டும் தீர்வாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேவை அதிகரித்துள்ள நிலையில், தண்ணீரை சேமிக்க அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே சென்னை நகரின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துவிட்டது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.23 டிஎம்சி (ஒரு டிஎம்சி என்பது 100 கோடி கன அடி) ஆகும். இதில் 2 சதவீதத்துக்கும் குறைவாகவே (0.061 டி.எம்.சி) நீர் இருப்பு உள்ளது. தற்போது கிருஷ்ணா நதி நீர் சென்னையை வந்தடைந்திருப்பதால் ஏரிகளில் நீர் மட்டம் உயரலாம். ஆனால், இது கடுமையான பற்றாக் குறைக்கு தீர்வாக அமையுமா?

சென்னை நகரம் 1947, 1954, 1968, 1972 முதல் 1975 வரை, 1982, 1983, 2000 முதல் 2003 ஆகிய ஆண்டுகளில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்துள்ளது. இதற்கு முழுமையான தீர்வு காண வேண்டும் என்பதற்காகத்தான் தெலுங்கு-கங்கை திட்ட (கிருஷ்ணா நதி நீர் திட்டம்) ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும் வீராணம் ஏரியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் பெறும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. ஆனால், மக்கள் தொகைப் பெருக்கம், உள்கட்டுமானப் பரப்பு அதிகரிப்பு மற்றும் போதிய மழையின்மை காரணமாக சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்டது.

பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தற்போது 2.24 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது. சென்னையின் நீர்த் தேவை நாளொன்றுக்கு 90 கோடி முதல் 100 கோடி லிட்டர் வரையாகும். ஆனால், குடிநீர் வாரியம் சுமார் 55 கோடி லிட்டர் மட்டுமே வழங்குகிறது. இதில், நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களின் மூலம் கிடைக்கும் 20 கோடி லிட்டரும், வீராணத்தில் இருந்து வரும் 18 கோடி லிட்டரும் அடங்கும். மீதமுள்ள தேவைக்கு நிலத்தடி நீரையே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கிருஷ்ணா நீருக்கும் சிக்கல்

கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத் தின் அடிப்படையில் ஆண்டுக்கு 15 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு ஆந்திரம் தரவேண்டும். இதுவரை ஒரு ஆண்டுகூட முழு அளவு நீர் கிடைக்கவில்லை. 2011-ல் கிடைத்த 8.2 டிஎம்சிதான் அதிகபட்சமாகும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் 3 டிஎம்சி நீர் தருவதாக ஆந்திர மாநில அரசு ஒப்புக்கொண்டாலும் கடந்த மார்ச் 21-ம் தேதி வரை 1.3 டிஎம்சி மட்டுமே திறந்துவிடப்பட்டது. அம்மாநில நீர்த் தேக்கங்களிலும் நீரின் அளவு குறைந்து வருவது முக்கியக் காரணம்.

‘‘கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 20 கோடி லிட்டர் நீர் எந்த காலத்திலும் கிடைக்கும்படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக 2 திட்டங்களுக்கான கருத்துருக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கிருஷ்ணா நீரைக் கொண்டு இந்த ஆண்டின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளித்துவிட முடியும்’’ என்று குடிநீர் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்தது ஒரு காரணம் என்றாலும், நீர் மேலாண்மை யிலும் நீர் நிலை பராமரிப்பிலும் கவனம் செலுத்தாததும் முக்கியக் காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.

‘மழை இல்லம்’ அமைப்பின் இயக்குநர் சேகர் ராகவன் கூறும்போது, “தண்ணீர் பற்றாக்குறை ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். ஏரிகள் வறண்டு கிடக்கும்போது அவற்றை தூர் வார வேண்டும். ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக சென்னையின் முக்கியமான ஏரிகள் தூர்வாரப்படவில்லை. ஆந்திராவிடம் இருந்து 15 டிஎம்சி நீர் கேட்கிறோம். ஆனால், அதை சேமித்து வைக்க இடம் எங்கே இருக்கிறது? நமது சொந்த நீர்வளங்களை மேம்படுத்த திட்டமிடாமல் இப்பிரச்சினைக்கு தீர்வை எட்ட முடியாது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE