சென்னை விமான நிலையத்தில் தேங்கிய மழைநீர்: பயணிகள் உடைமைகளை எடுக்க முடியவில்லை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்

சென்னை விமான நிலையத்தில் மழைநீர் தேங்கி நின்றதால், கன்வேயர் பெல்டில் இருந்து தங்கள் உடைமைகளை எடுக்க முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையம் சுமார் ரூ.2 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டு கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. விமான நிலையத்தின் மேல் கூரையில் தேங்கும் மழைநீர், அங்கு அமைக்கப்பட்டுள்ள பைப்லைன் மூலம் தரைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து கால்வாயில் மழைநீர் செல்லும்படி பைப்லைன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 15-ம் தேதி பெய்த பலத்த மழையின் போது பைப்லைனும், கால்வாயும் இணையும் இடத்தில் அடைப்பு ஏற்பட்டது. அதனால் மழைநீர் செல்ல முடியாமல் பைப்லைனில் தேங்கி நின்றது.

திடீரென பைப்லைனும், கால்வாயும் இணையும் இடத்தில் உடைப்பு ஏற்பட்டதால், உள்நாட்டு முனையத்தின் வருகைப் பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பயணிகளின் உடைமைகள் வரும் கன்வேயர் பெல்ட் இருக்கும் பகுதி உட்பட தளம் முழுவதும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் கன்வேயர் பெல்டில் வந்த தங்களுடைய உடைமைகளை எடுத்து கீழே வைக்க முடியாமல் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். ஒரு சில பயணிகள் தங்களுடைய உடைமைகளை தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு சென்றனர். ஒரு சிலரின் பொருட்கள் தண்ணீரில் முற்றிலுமாக நனைந்தன.

இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் விமான நிலைய அதிகாரிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். பைப்லைனின் அடைப்பு மற்றும் உடைந்த பகுதியும் சரிசெய்யப்பட்டது.

இது தொடர்பாக சென்னை விமான நிலைய இயக்குநர் தீபக் சாஸ்திரி கூறும்போது, “சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு தேவை யான அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் செய்து தரு கிறோம். விமான நிலையத்தில் தண்ணீரில் உடைமைகள் நனைந்ததாகவோ, பொருட்கள் சேதம் அடைந்து விட்டதாகவோ எந்த பயணி யும் புகார் அளிக்கவில்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE