எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உடனடியாக வழங்க வேண்டும்: கிறிஸ்துதாஸ் காந்தி வலியுறுத்தல்

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள கல்வி உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி மற்றும் அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கத்தின் நிறுவனர் கிறிஸ்துதாஸ் காந்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தை அமல்படுத்த 2012-ம் ஆண்டு தமிழக அரசு இரண்டு அரசாணைகள் வெளியிட்டது. இத்திட்டத்துக்கு மத்திய அரசு நிதி அளிப்பதோடு மாநில அரசும் நிதி ஒதுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.1000 கோடி வழங்க வேண்டியுள்ளது. ஆனால் கடந்த நான்கு கல்வி ஆண்டுகளாக உதவி தொகை முறையாக கிடைக்கவில்லை. இதனால் பல மாணவர்கள் கல்லூரி கட்டணத்தை கட்ட முடியாமல் இந்த ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

மத்திய அரசு இத்திட்டத்துக்காக இது வரை ரூ.140 கோடி மட்டுமே கொடுத்ததாகவும் அதனால் இந்த ஆண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கான மாநில நிதியை ஒதுக்கவில்லை என்றும் தமிழக அரசு கூறுகிறது. மக்கள் முதல்வர் அளித்த உத்தரவை இன்றைய முதல்வர் நடைமுறைப்படுத்த மறுக்கிறாரா?

இந்த ஆண்டு பட்ஜெட்டிலேயே இத்திட்டத்துக்கு தேவையான கூடுதல் தொகையான ரூ.700 கோடியை ஒதுக்க வேண்டும். 2015-16-ம் ஆண்டுக்கான உதவித்தொகையை ஜூலை மாதத்துக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

இந்த சந்திப்பின் போது அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கத்தின் மாநில அமைப் பாளர்கள் எம்.பரதன், பாரதி பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE