வாக்காளர் பட்டியல் – ஆதார் இணைப்புப் பணி: 1.82 கோடி வாக்காளர்களின் விவரங்கள் பதிவு

தமிழகத்தில் இதுவரை 3 கோடி வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் பெறப்பட்டு, அதில் 1.82 கோடி பேரின் விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் அவர் இன்று கூறியதாவது:

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல்- ஆதார் இணைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 3 கோடி வாக்காளர்களின் தகவல்கள் பெறப்பட்டு, அதில் 1.82 கோடி வாக்காளர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தினமும் 8 முதல் 10 லட்சம் பேரின் விவரங்கள் பெறப்படுகின்றன. 10 முதல் 20 லட்சம் பேர் விவரங்கள் கணினியில் பதியப்படுகிறது. வீடு வீடாக சென்று விவரங்கள் பெறும் பணி தொடர்ந்து நடக்கிறது.

கடந்த 12-ம் தேதி நடந்த சிறப்பு முகாமில் 5.72 லட்சம் மனுக்கள் திருத்தம் தொடர்பாக பெறப்பட்டன. இந்த மனுக்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம்கட்ட சிறப்பு முகாம் 64,094 வாக்குச்சாவடிகளில் 26-ம் தேதி நடக்க உள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், கோவை மாவட்டங்களில் 70 சதவீதம் வாக்காளர்கள் விவரங்கள் பெறப்பட்டுள்ளன.

ஆதார் தொடர்பாக யுஐடிஏஐ-விடம் இருந்து பெறப்பட்ட விவரங்கள்படி தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 4 கோடியே 18 லட்சத்து 65 ஆயிரத்து 832 பேருக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது 81.4 சதவீதம் பேருக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் எடுத்துள்ள விவரங்களை இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்து மீதமுள்ளவர்களின் விவரங்களும் சேர்க்கப்படும்.

இவ்வாறு சந்தீப் சக்சேனா கூறினார்.

சென்னையில் மிக குறைவு

வாக்காளர் பட்டியல்- ஆதார் இணைப்பு பணிகளை வேகமாக முடிப்பதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. இதற்காக சமீபத்தில் நடந்த தென்மாநிலங்கள் அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மே 31-ம் தேதிக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சென்னையில்தான் மிகக்குறைவான ஆதார் இணைப்பு பணிகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 38.35 லட்சம் வாக்காளர்களில் 10 லட்சம் பேர் மட்டுமே விவரங்களை அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருத்தங்களுக்கு ஒரே படிவம்

தற்போது வாக்காளர் பட்டியலில் ஒவ்வொரு திருத்தத்துக்கும் தனித்தனி படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி திருத்தம் போன்றவற்றுக்காக படிவம் 6, 7, 8, 8-ஏ என தனித்தனியாக படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த முறையை மாற்றி, ஒரே படிவத்தில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் திட்டத்தை அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் முதல்கட்டமாக தமிழகத்தில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும், தானியங்கி சேவை முறையில் செல்போன் மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளும் வசதியும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. திருத்தங்கள் கோரி விண்ணப்பிக்கும் வாக்காளர்களுக்கு அது தொடர்பான விவரங்களை போனில் தெரிவிக்கும் வசதியும் கொண்டு வரப்படுகிறது.





VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE