மேலூர் சிறார் சீர்திருத்த பள்ளியில் மோதல்: தலைமை சிறைக் காவலர் உட்பட 7 பேர் காயம்

மதுரை மாவட்டம், மேலூர் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் நடந்த பயங்கர மோதலில் தலைமை சிறைக் காவலர் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.

மேலூரில் சிறார் சீர்திருத்தப் பள்ளி (பாஸ்டல் பள்ளி) செயல்பட்டு வருகிறது. மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் 18 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்களை இங்கு அடைத்து கண்காணிப்பது வழக்கம். தற்போதைய நிலவரப்படி சுமார் 85 பேர் அங்கு உள்ளனர்.

நேற்று காலை குளிப்பதற்காக இவர்கள் அனைவரையும் அறை களிலிருந்து வெளியே திறந்து விட்டனர். முதல்நிலை தலைமை சிறைக்காவலர் சந்தானம் தலைமையில் 5 சிறைக்காவலர்கள் அவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது கொலை வழக்கு விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் மீது திடீரென 10-க்கும் மேற்பட்டவர்கள் தாக்கு தல் நடத்தினர். பதிலுக்கு அவர்களும் திருப்பித் தாக்கினர்.

சிறைக்காவலர்கள் ஓடிச் சென்று மோதலைக் கட்டுப்படுத்த முயன்ற னர். ஆனால் முடியவில்லை. அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் முதல்நிலை தலைமை சிறைக் காவலர் சந்தானம் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக மேலூர் போலீ ஸாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அவர்கள் வந்து மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மோதலில் சகோதரர்கள் காயமடைந்தனர். மேலும் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

காயமடைந்த அனைவருக்கும் அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட் டது. முதல் நிலை தலைமைக் காவலர் சந்தானத்தை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி மேலூர் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினார்.

12 பேர் இடமாற்றம்

இதுபற்றி கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி கூறியது: மேலூர் காவல் நிலையம் அருகில் இருந்ததால் 10 நிமிடங்களுக்குள் இந்த மோதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற மோதல் தொடராமல் இருக்க இங்கிருந்து 6 பேரை தஞ்சாவூர், மற்றும் 6 பேரை புதுக்கோட்டை சிறார் சீர்திருத்தப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்துள்ளோம் என்றார்.

பழிவாங்க தாக்குதலா?

இதுபற்றி போலீஸார் கூறும் போது, ‘அதிமுகவை சேர்ந்த மதுரை சக்கிமங்கலம் ஊராட்சி தலைவர் கருப்பசாமி அண்மையில் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டிருந்த சகோதரர்கள் தற்போது தாக்கப்பட்டுள்ளனர். எனவே கருப்பசாமி கொலைக்கு பழிவாங்க, இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE