பொது இடங்களை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் மாற்றுத் திறனாளிகள்: அமல்படுத்தாத அரசு உத்தரவு

பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகள் பயன்பாட்டுக்கான சாய்வுத்தளம், கைப்பிடி, மின் தூக்கி மற்றும் வாகன நிறுத்த சிறப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டு இரண்டாண்டுகளுக்குப் பின்னரும் இவ்வசதிகள் ஏற்படுத்தப் படாததால் மாற்றுத் திறனாளிகள் தவிக்கின்றனர்.

1995-ம் ஆண்டு மத்திய அரசு உடல் ஊனமுற்ற மக்களுக்கான சட்டத்தை நிறைவேற்றியது. அதனைத் தொடர்ந்து பல மாநிலங்களிலும் மாற்றுத் திறனாளிகள் மீதான சிறப்பு கவனம் கோரிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. 2003 மற்றும் 2013-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட தமிழக அரசாணைகளில் பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்படுத்தி தரவேண்டிய வசதிகள் குறித்து கூறப்பட்டிருந்தன. ஆனால், இவை சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அமல்படுத்தப்படுவதில்லை.

பொதுவாக அரசு கட்டிடங் களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தும் என்று பலர் புரிந்து கொள்கின்றனர். ஆனால், பொது பயன்பாட்டுக்காக கட்டப்படும் தனியார் நிறுவனங்கள், நூலகம், மருத்துவமனை, உணவகம், திரை யரங்கங்கள், நீச்சல் குளங்கள், அருங்காட்சியம், விளையாட்டு மைதானம், வங்கிகள், ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் ஒளிப்பட மையங்கள் உள்ளிட்ட 14 விதமான கட்டிடங்கள் இதில் அடங்கும்.

சக்கர நாற்காலியுடன் வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு இடம் கொடுக்கும் அளவு மின் தூக்கிகள் இருக்க வேண்டும். படிகட்டுகளுக்கு அருகில் சுவர் இருந்தாலும் 90 செ.மீ உயரத்தில் ஒரு கைப்பிடியும், கூடுதலாக 75 செ.மீ உயரத்தில் ஒரு கைப் பிடியும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கழிப்பறைகள், தரை தளத்தில் இருக்க வேண்டும். கார் நிறுத்தங்களில் 10சதவீதம் இடம் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 கார்கள் நிறுத்தும் இடங்களும் அந்த இடம் வாயிலுக்கும், படிகட்டுகளுக்கும் அருகில் இருக்க வேண்டும்.

“கைப்பிடியே இல்லாமல் சாய்தளங்கள் மட்டும் அமைத்து அந்த கட்டிடங்களில் மாற்று திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என்று திருப்தியடைந்து விடுகின்றனர். விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், மாநகராட்சிக்கு சொந்தமான பிட்டி.தியாகராயர் அரங்கம் ஆகிய இடங்களில் கூட மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியான கழிப்பறைகள் இல்லை” என்கிறார் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொருளாளர் பி.சந்திரகுமார்.

‘தி இந்து’ உங்கள் குரலில் இதுபற்றி புகார் தெரிவித்த வாசகர் சங்கரன் கூறியதாவது: “சென்னையில் மிகவும் பிரபலமான நாரத கான சபா உள்ளிட்ட பல இடங்களில் சாய்தளங்கள் இல்லை. வாசலில் நுழைவதற்கு இத்தகைய வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், மேடை உள்ளிட்ட பிற இடங்களில் இவ்வசதி இல்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE