தேனியில் சமூக விரோதிகளின் கூடாரமாகி வரும் சமணர் குகை படுக்கை

சமூக விரோதிகளின் கூடாரமாக சமணர் குகை படுக்கை மாறி வருவதால், அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் திருச்சுணைகிரி மலையில் சமணர் குகை படுக்கை உள்ளது. இது தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த குகை படுக்கை பகுதியில் சுற்றுச்சுவர் அல்லது முள்வேலி அமைக்கப்படாமல் திறந்த வெளியாக இருப்பதால், சமூக விரோதிகள் மது குடிக்கும் பாராக மாற்றி விட்டனர். அப்பகுதியினர் அறியாமையால், சமணர் குகை படுக்கைகளை கழிப்பிடங்களாக பயன்படுத்துகின்றனர்.

இதை தொல்லியல் துறையினர் கண்டுகொள்வதில்லை. மகாவீரர் ஜெயந்தி அன்று மட்டும் சிலர், திருசுணைகிரி மலையின் மீது உள்ள லிங்கத்துக்கு பூஜை செய்து விட்டு குகை படுக்கையை பார்வையிட்டு செல்கின்றனர். மற்ற நாட்களில் யாரும் கண்டுகொள்வதில்லை.

இதுகுறித்து சமூக ஆர்வலர்களான ரவிச்சந்திரன், பாண்டி ‘தி இந்து’ விடம் கூறியதாவது: நல்லொழுக்கம், நன்னடத்தை, நற்காட்சி என்று சமணர்கள் வாழ்ந்து வந்தனர். ஆரியர் சமய படையெடுப்பு காரணமாக சமணர் மதம் அழிந்து விட்டது. அவர்கள் வாழ்ந்த குகை படுக்கை இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ளது.

24-வது கடைசி தீர்த்தங்கராக மகாவீரர் வாழ்ந்துள்ளார். மகாவீரர் ஜெயந்தி அன்று இறைச்சி கடை, டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு தடை விதித்துள்ளது-. ஆனால், சமணர் வாழ்ந்த குகை படுக்கைகள் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. குகையின் அடியில் உள்ள சுணை நீரில் (ஊற்று) குப்பை தேங்கி கிடக்கிறது. அசுத்தமாக காணப்படும் குகை படுக்கையை சுத்தம் செய்து முறையாக பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE