தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் தொடங்கியது

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் நேற்று தொடங்கியது. இதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 744 விசைப்படகு கள் கடலுக்குச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடலில் மீன் வளத்தை பெருக் கும் விதமாக அவை இனப்பெருக் கத்தில் ஈடுபடும் ஏப்ரல், மே மாதங்களில் ஆண்டுதோறும் 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் நேற்று தொடங்கியது. மே 29-ம் தேதி வரை இது அமலில் இருக்கும். தடை காலத்தில் விசைப் படகுகள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படாது. இதனால், இந்த காலத்தில் மீனவர்கள் படகுகளை பழுதுபார்த்தல், வலைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். சிறிய கட்டுமர மீனவர்கள் மட்டும் கடலில் சிறிது தூரம் சென்று மீன்களை பிடித்து வருவர்.

தடை காலம் தொடங்கியதை யடுத்து, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகப் பகுதியில் மீன்வளத்துறையில் பதிவு பெற்ற 744 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தென்னிந்திய மீனவர் நலச் சங்க தலைவர் வே.சங்கர் கூறியதாவது: மீன்பிடி தடை காலத்தில் அரசு வழங்கும் நிவாரணம் ரூ.2 ஆயிரம் போதுமான தாக இல்லை. குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் 45 நாட்களுக்கு ரூ.4,500 வழங்க வேண்டும். மீன்பிடி தடை காலத்தை 61 நாட்களாக மாற்ற மத்திய அரசு முயன்று வருகிறது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைபோலவே தமிழகத்தின் அனைத்து மீன்பிடி பகுதிகளிலும் தடைக்காலம் நேற்று தொடங்கியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE