மூளைச்சாவு அடைந்த டிக்கெட் பரிசோதகரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த சென்னை மாநகர போக்குவரத்துக் கழக டிக்கெட் பரிசோதகரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

சென்னை ஆவடி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் நாராயணசாமி (57). சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் (எம்டிசி) டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மஞ்சுளா (53). ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 21-ம் தேதி சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் அருகே பைக்கில் வந்துகொண்டிருந்த நாராயணசாமி திடீரென மயங்கி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த இவர், சிகிச்சைக்காக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அவர் மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக உறவினர்கள் டாக்டர்களிடம் தெரிவித்தனர். அதன்படி டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை செய்து நாராயணசாமி உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம் மற்றும் கண்களை எடுத்தனர். தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள் தேவையானவர்களுக்கு பொருத்தப்பட இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நாராயணசாமி இன்னும் 10 மாதத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE