சென்னை குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் நீர் நிரப்பும் பணி தீவிரம்

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வரும். அதிலிருந்து விவசாய பணிகள் மற்றும் சென்னை குடிநீர் தேவைக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ஆண்டு கோடைகாலத்தை முன்னிட்டு வீராணம் ஏரியின் முழு கொள்ளளவான 47 அடிக்கு தண்ணீரை தேக்கிவைத்தனர். பாசன காலம் முடிந்ததும் மீண்டும் பிப்ரவரி மாதம் தேக்கி வைக்கப்பட்டது. சென்னைக்கு விநாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்ததாலும் கடும் வெயில் காரணமாகவும் நீர்மட்டம் 45 அடியாக குறைந்துள்ளது. தற்போது, சென்னைக்கு விநாடிக்கு 69 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது. கோடை காலத்தில் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கீழணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த மழை நீர் கீழணைக்கு வந்ததால் 2 அடி வரை தண்ணீர் உள்ளது.

இந்த தண்ணீரை வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு பொதுப் பணித் துறையினர் நேற்று திறந்து விட்டனர்.

இதனால், ஏரிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. இதற்கிடையே, தமிழக அரசு உத்தரவுப்படி கீழணைக்கு மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் இன்று அல்லது நாளை வந்துசேரும். அப்போது, வடவாறு வழியாக கூடுதலாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு நிரப்பப் படும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE