போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை: தா.பாண்டியன் மீது மோசடி புகார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு தொழிற்சங்கத்துக்குச் சொந்தமாக திருச்சியில் இருந்த 5,000 சதுர அடி பரப்பளவு கொண்ட ரூ.3 கோடி சந்தை மதிப்புகொண்ட நிலத்தை, ரூ.20 லட்சத்துக்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த தா.பாண்டியன், சென்னையைச் சேர்ந்த ரபீக் என்பவருக்கு விற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்த செய்தி ‘தி இந்து’வில் கடந்த ஆண்டு ஜூலை 18-ம் தேதி வெளியானது. அதற்கு அப்போது அவருடைய கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதேநேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் தா.பாண்டியனின் செயலைக் கண்டித்ததுடன், இதுகுறித்து கட்சியின் அகில இந்திய தலைமையிடம் புகார் செய்திருந்தனர்.

இந்நிலையில், முறைகேடாக நடந்த நில விற்பனையை ரத்து செய்யக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அமைப்பான ஏஐடியூசி-யின் திருச்சி மாவட்ட செயலாளர் மணி, திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.சேகர், திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்தார்.

அதில், சவுத் மெட்ராஸ் எலெக்ட்ரிசிட்டி ஒர்க்கர்ஸ் யூனியன் என்ற அமைப்புக்குச் சொந்தமான, திருச்சி பழைய குட்ஷெட் சாலையில் உள்ள 5,000 சதுர அடி நிலத்தை, சென்னை பெரம்பூரில் வசிக்கும் ரபீக் அகமது என்பவருக்கு ரூ.20 லட்சத்துக்கு 22.03.2012 அன்று தா.பாண்டியன் கிரயம் செய்து கொடுத்துள்ளார். இதற்கு தென்னூர் இணை சார்பதிவாளர் உடந்தையாக இருந்துள்ளார். மேலும் ஆவண எழுத்தர் எஸ்.ஜூலியன் செபாஸ்டியன் என்பவர் சாட்சிக் கையெழுத்திட்டு மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

எனவே, திட்டமிட்டு கூட்டுச் சதி செய்து போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி கிரய நடவடிக்கை மூலம் தொழிற்சங்க சொத்தை அபகரித்த தா.பாண்டியன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE