அமெரிக்க ஆயுத கப்பல் ஊழியர்களுக்கு பாஸ்போர்ட், ஆயுதங்கள் வழங்க மறுப்பு: சான்றிதழ்களை மட்டும் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க ஆயுதக் கப்பல் ஊழியர்களின் உடைமைகளை, அவர்களிடம் திரும்ப வழங்க தூத்துக்குடி நீதித்துறை நடுவர் நீதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில் அவர்களது ஆயுதங்கள், பாஸ் போர்ட் உள்ளிட்ட பயண ஆவ ணங்கள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களையும், கியூ பிரிவு போலீஸார் ஆட்சேபம் தெரிவிக் கும் பொருட்களையும் கப்பல் ஊழியர்களிடம் வழங்கக் கூடாது என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக பிடிபட்ட அமெரிக்க ஆயுத கப்பலான சீமேன் கார்டு ஒகியோ கப்பல் கேப்டன் டுட்னிக் வாலன்டைன் உட்பட 35 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

தூத்துக்குடி கடல் பகுதியில் எங்கள் கப்பலை 5.11.2013-ம் தேதி கியூ பிரிவு போலீஸார் தடுத்து நிறுத்தினர். எங்களது பாஸ்போர்ட் மற்றும் பொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவை கப்பலின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பொருட்களைத் திரும்ப கேட்டு தூத்துக்குடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.

நாங்கள் வெளிநாட்டினர். ஏற் கெனவே 6 மாதங்கள் சிறையில் இருந்துள்ளோம். எங்கள் மீதான குற்றச்சாட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி எங்களது உடைமைகளை திரும்பத் தர மறுப்பது நியாயமற்றது. எனவே, தூத்துக்குடி நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, பாஸ்போர்ட் உள்ளிட்ட எங்களது உடைமைகளை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து நேற்று பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர்கள் வருமானம் இல்லாமல் பிழைப்புக்கு கஷ்டப் படுவதாக கூறுகின்றனர். எனவே, அவர்களின் உடைமைகளை அவர்களுக்குத் திரும்ப வழங்க வேண்டும். இதற்காக ஏதாவது ஒரு சனிக்கிழமை மனுதாரர்கள், கியூ பிராஞ்ச் போலீஸார் மற்றும் இரு தரப்பு வழக்கறிஞர்களைத் தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் அழைத்து, அவர்களின் முன்னிலையில் அமெரிக்க ஆயுத கப்பலின் பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க வேண்டும்.

சான்றிதழ்களை மட்டும்

அந்தப் பெட்டகத்தில் உள்ள கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட உடைமைகளை கப்பல் ஊழியர் களிடம் வழங்கி அவர்களிடம் ஒப்புதல் சான்று பெற வேண்டும். கியூ பிராஞ்ச் போலீஸாரால் ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட் களை ஊழியர்களிடம் வழங்கக் கூடாது. அவற்றை பாதுகாப்பு பெட்டகத்திலேயே வைக்க வேண்டும்.

பெட்டகத்தில் இருக்கும் பொருட்களில் 35 ஆயுதங்கள், பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்கள், 102 துப்பாக்கி குண்டுகள் நிரப்பிய பாக்ஸ், டிஜிட்டல் ரிக்கார்டர், சிபியூ, கப்பலின் பதிவு சான்று உள்ளிட்ட ஆவணங்கள், கப்பல் மற்றும் கப்பல் கேப்டனின் நாள் குறிப்பேடு ஆகியவற்றை கப்பல் ஊழியர்களிடம் வழங்கக் கூடாது. பொருட்கள் வழங்கப்பட்ட பின் அது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE