சென்னை அடையாறில் சோக சம்பவம்: பள்ளிக் கட்டிடம் இடிந்து 2 மாணவிகள் பலி, ஒருவர் படுகாயம் - உறவினர்கள் மறியல்; அரசு ரூ.3 லட்சம் நிதியுதவி

அடையாறில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். இதனால், ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோரும் பொதுமக்களும் மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை அடையாறு பெசன்ட் நகர் பிரதான சாலை ஆவின் கேட் பகுதியில் அவ்வை இல்லம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றோர் இல்லம், பிரைமரி பள்ளி மற்றும் டிவிஆர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி அம்மையாரால் இந்த அவ்வை இல்லம் தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் ஆயிரக்கணக்கான ஏழை மாணவிகள் படித்து வருகின்றனர்.

பள்ளி வளாகத்தில் 1976-ம் ஆண்டு 10 வகுப்பறைகளும், ஒரு சமையல் அறையும் கட்டப்பட் டது. சமையல் அறை கட்டிடம் நீண்டகாலமாக பயன்படுத்தப்படா மல் பாழடைந்த நிலையில் இருந்தது. இதனால், அந்தக் கட்டிடத்தின் அருகே யாரும் செல்ல வேண்டாம் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்திருந்தது.

அருகில் உள்ள மீனவ கிராமங்களான பெசன்ட் நகர் ஊரூர் குப்பத்தைச் சேர்ந்த மூர்த்தி - லட்சுமி தம்பதியின் மகள் நந்தினி (13), ஆற்காடு குப்பத்தைச் சேர்ந்த கதிரேசன் - உதயகலா தம்பதியின் மகள் மோனிஷா (13), அதே பகுதியைச் சேர்ந்த சந்தியா (13) ஆகியோர் இங்கு 8-ம் வகுப்பு படித்து வந்தனர். மூவரும் இணை பிரியா தோழிகள்.

ஆண்டு இறுதித் தேர்வுகள் நடந்து வருவதால் பள்ளியில் நேற்று மாணவிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பள்ளிக்கு வந்த நந்தினி, மோனிஷா, சந்தியா ஆகிய மூவரும் மதியம் 12.20 மணி அளவில் பாழடைந்த சமையல் அறை கட்டிடம் அருகே சென்றனர். பள்ளியில் வேலை செய்யும் சிலர் துணி காயப்போடுவதற்காக அந்தக் கட்டிடத்தின் சுவர்களை இணைத்து இரும்புக் கம்பி கட்டியிருந்தனர்.

தோழிகள் 3 பேரும் இரும்புக் கம்பியைப் பிடித்து ஊஞ்சல் ஆடியதாக கூறப்படுகிறது. அப் போது திடீரென கட்டிட சுவர் இடிந்து மாணவிகளின் மீது விழுந்தது. இடிபாடுகளுக்கு இடையில் 3 பேரும் சிக்கிக்கொண்டனர். இதைப் பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி யடைந்து, பள்ளி நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அடையாறு தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி, 3 மாணவிகளையும் மீட்டனர்.

ஆனால், தலையில் பலத்த காயம் அடைந்த நந்தினி, மோனிஷா இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த சந்தியா, அருகே உள்ள தனியார் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான மாணவிகளின் உடல்கள், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சம்பவம் குறித்து அறிந்ததும் சென்னை ஆட்சியர் சுந்தரவள்ளி, வருவாய் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ அசோக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோரும் அங்கு வந்தனர். மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ், சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

உறவினர்கள் மறியல்

மதியம் 2 மணி அளவில் பள்ளிக்கு வந்த மாணவிகளின் பெற்றோரும், பொதுமக்களும் பள்ளி நிர்வாகிகளின் அலட்சியமே இருவரின் உயிரை பறித்து விட்டது என்று கூறி பெசன்ட் நகர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி, கலைந்துபோக வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சாஸ்திரி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலா ரூ.3 லட்சம் நிதி

இந்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவிகள் நந்தினி மற்றும் மோனிஷா ஆகியோரின் குடும்பங் களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள் ளது. மாணவி சந்தியாவின் முழு மருத்துவச் செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, மாணவி சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனைக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE