ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக புகார்: அமைச்சர் மீது வழக்கு பதிய கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது அளித்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த கீழவளச்சேரி எஸ்.வி.எஸ்.குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். கடந்த 2009-ம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் வீடு ஒன்றை வாங்கினேன். ஆனால், அதன் உரிமையாளர் வீட்டை காலி செய்ய மறுத்துவிட்டார். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் என்னைச் சந்தித்து, ‘நான் வழக்கறிஞர். அதிமுக ராஜ்யசபா எம்.பி, காமராஜ் (தற்போதைய உணவுத்துறை அமைச்சர்) எனது உறவினர்தான். நீங்கள் வாங்கிய வீட்டை காலி செய்து தருகிறேன்’ என்று உத்தரவாதம் அளித்தார். அதற்காக ரூ.15 லட்சத்தை 2 தவணையாக என்னிடமிருந்து வாங்கினார். ஆனால், சொன்னபடி வீட்டை காலி செய்து தரவில்லை.

இதற்கிடையே, காமராஜை சந்திக்க மன்னார்குடியில் உள்ள அவரது வீட்டுக்கு என்னை ராமகிருஷ்ணன் அழைத்துச் சென்றார். அப்போது வீட்டை உறுதியாக காலி செய்து தருவோம் என்று என்னிடம் காமராஜ் உறுதியளித்தார். மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் நன்னிலம் தொகுதியில் சீட் கிடைத்திருப்பதாகவும் தேர்தல் செலவாக ரூ.30 லட்சம் கொடுக்கும்படியும் கேட்டார். ஏற்கெனவே ரூ.15 லட்சம் கொடுத்துள்ளதால் மேற்கொண்டு இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க மிகவும் தயங்கினேன். என்னிடம் ஏதேதோ பேசி ரூ.30 லட்சத்தைப் பெற்றுக்கொண்டனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற காமராஜ் உணவுத்துறை அமைச் சரானார். அதன்பிறகு அமைச் சரையோ வழக்கறிஞர் ராம கிருஷ்ணனையோ என்னால் தொடர்பு கொள்ளவே முடிய வில்லை. திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த மார்ச் 10-ம் தேதி புகார் கொடுத்தேன். காவல் துணை கண்காணிப்பாளர் அறிவானந்தம் என்னிடம் விசாரணை நடத்தி, அசல் ஆவணங்களை வாங்கிக்கொண்டார்.

அதன்பிறகு அமைச்சரின் ஆதரவாளர்கள் சிலர் என்னைத் தாக்கினர். அதனால் நானும் எனது குடும்பத்தினரும் தற்போது தலைமறைவாக இருக்கிறோம். எனவே, மார்ச் 10-ம் தேதி அளித்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு செய்ய திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை 24-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE