அர்ஜென்டினாவில் இறந்த மலையேற்ற வீரர் மஸ்தான் பாபு உடல் சென்னை கொண்டு வரப்பட்டது: ஆந்திராவில் இன்று இறுதிச் சடங்கு

By செய்திப்பிரிவு

அர்ஜென்டினா மலைப் பகுதியில் இறந்த இந்திய மலையேற்ற வீரர் மல்லி மஸ்தான் பாபுவின் உடல், நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் இன்று இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.

ஆந்திர மாநிலம், நெல்லூரை அடுத்த காந்தி ஜனசங்கம் என்ற ஊரைச் சேர்ந்த மல்லி மஸ்தான் பாபு (40), உலகப் புகழ் பெற்ற மலையேற்ற வீரர்களில் ஒருவர். இவரது வேலை மற்றும் பொழுது போக்கு மலையேற்றம்தான்.

காரக்பூர் ஐஐடி மற்றும் கொல்கத்தா ஐஐஎம் ஆகியவற்றில் படித்துள்ள இவர், 2006, ஜன. 19-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரையில் (172 நாட்களில்) உலகின் 7 கண்டங்களில் உள்ள பல மலைகளில் ஏறி சாதனைப் புரிந்துள்ளார்.

அண்டார்டிகாவில் உள்ள வின்சன் மாசிப் சிகரத்தின் மீது ஏறிய முதல் இந்தியர் மற்றும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் ஆந்திர மாநிலத்தவர் ஆகிய பெருமைகளைப் பெற்றவர்.

சிலி, கொலம்பியா, பெரு, அர்ஜென்டினா, வெனிசூலா, பொலிவியா ஆகிய நாடுகளில் பரவியுள்ள ஆண்டிஸ் மலைத் தொடரில் ஏறுவதற்கான குழுவில் இடம் பெறுவதற்காக, கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி நெல் லூரிலிருந்து புறப்பட்டுச் சென்றார். மலைத் தொடர் பயணத்தைத் தொடங்கியபோதே அங்கு வானிலை மோசமாக இருந்தது.

இதனிடையே, அர்ஜென்டினா - சிலி இடையிலான மலைப் பகுதியில் அவர் மலையேற் றத்தில் ஈடுபட்டிருந்தபோது, கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் அவருடனான தொடர்பு துண்டிக்கப் பட்டது. ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மலையேறும் வீரர்கள் அவரைத் தேடி வந்தனர். அங்கு பலத்த மழை பெய்ததால் இதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. பின்னர், அர்ஜென்டினா மலைப் பகுதியில் 6,000 மீட்டர் உயரத் தில் பாபுவின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனை நடத்தப் பட்டது.

இந்த நிலையில், பாபுவின் உடல் சென்னை விமான நிலையத் துக்கு நேற்று கொண்டுவரப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஆந்திரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE